கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பான பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பில் கீழடியில் நடந்த அகழாய்வில், பழந்தமிழர் நாகரிகம், அவர்கள் பயன்படுத்திய தொன்மை பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்திய தொல்பொருள் அகழாய்வு மையத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலிரண்டு ஆண்டுகள் நடந்த அகழாய்வுகளில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழர்களின் நகர நாகரிகம் என்பது தெரிய வந்தது.
தமிழர் நாகரிகமே முந்தையது என்ற வரலாற்று ஆய்வை, எளிதாக பாஜ அரசால் ஏற்க இயலவில்லை. இதையடுத்து அமர்நாத் ராமகிருஷ்ணாவை அதிரடியாக அசாம் மாநிலம், கவுஹாத்திக்கு மாற்றியது. இவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் கீழடி அகழாய்வில் மேற்கொண்ட 3வது அகழாய்வில் பெரியதாக எதுவுமே கிடைக்கவில்லை என்று கூறி, அகழாய்வை ‘ஊத்தி மூடும்’ அளவிற்கே அறிக்கை அனுப்பினார். இதையடுத்தே 4ம் கட்ட அகழாய்வில் இருந்து, தமிழக அரசு இப்பணியை ஏற்று நடத்தியது. தற்போது 10ம் கட்ட அகழாய்வு வரை முடிந்துள்ளது.
முதலிரண்டு அகழாய்வு அறிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார் அமர்நாத் ராமகிருஷ்ணா. 2 ஆண்டுகள் இந்திய தொல்லியல்துறையிடம் ‘ஆழ்ந்த உறக்கத்தில்’ இருந்தது. தொடர்ந்து கேள்விகள் எழுந்ததும், சுதாரித்த பாஜ அரசின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் கூடுதலாக தேவை. சில வரைபடங்களில் தெளிவில்லை. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காலங்களுக்கு போதிய ஆதாரங்கள் தேவையென கூறியிருந்தார்.
அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘‘கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது. கிமு 5ம் நூற்றாண்டு முதல் கிமு 8ம் நூற்றாண்டு காலம் தொடர்பான ஆய்வுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருத்தம் தேவையில்லை. அறிக்கையை தாக்கல் செய்து இரண்டரை ஆண்டுகள் கழித்து கேள்வி எழுப்பப்படுகிறது’’ என தெரிவித்திருந்தார். தமிழர் நாகரிகத்தை தரைமட்டமாக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தனர்.
அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கும் சூழலில், அவரை தற்போது மீண்டுமொரு முறை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது ஒன்றிய அரசு. டெல்லில் பண்டை கால ஆய்வு மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா, நொய்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த மாற்றம் நிர்வாகரீதியிலானது அல்ல; கீழடி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு நடத்தும் உள்ளடி அரசியல் போக்காகவே பார்க்கப்படுகிறது.
ஒன்றிய அரசு அதிகாரிகள், தங்களது கட்சிக் கொள்கைளின்படி செயல்பட வேண்டுமென விரும்புகிறதா பாஜ? ஒரு வரலாற்று உண்மையை வெளிப்படுத்தியதற்காக, ஒரு நேர்மையான அதிகாரியை அலைக்கழிக்கலாமா? அதிகாரிகளை தட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டிய அரசு, அவர்களை பந்தாடுவது நியாயமாகுமா? அதிகாரி மாற்றத்தில் காட்டக்கூடிய ஆர்வத்தை, 2015ல் அறிவித்த எய்ம்ஸை ெகாண்டு வருவதில் காட்டியிருக்கலாமே? இனியாவது இதுபோன்ற தரைமட்ட அரசியலை பாஜ கைவிட வேண்டுமென்பதே தமிழக கட்சிகள், மக்களின் வலியுறுத்தலாகும்.