Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிரீன்டெக் அறக்கட்டளை சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலகளாவிய சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாடு 2025-இல் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, கிரீன்டெக் அறக்கட்டளையால் இரண்டு மதிப்புமிக்க உலகளாவிய விருதுகள் (சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக - சுற்றுச்சூழல் விருது மற்றும் பாலின சமத்துவத்திற்காக - நிலைத்தன்மை விருது) வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, உதவி பொது மேலாளர் (வடிவமைப்பு) எஸ். ராஜலட்சுமி, மேலாளர் (சுற்றுச்சூழல்) ஆர். சரவண குமார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த விருது, பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பான நிகரற்ற சேவைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பாலினங்களுக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சி, தலைமைப் பொறுப்புகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றில் சம வாய்ப்புகளை அளிப்பதோடு மட்டும்மல்லாமல் அதனை உறுதி செய்யும் வகையில் பணியிடக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பாலின சமத்துவ விருதை முதல் முறையாக பெற்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கும் சிறப்பான தருணமாகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதலாக, இயற்கை வளங்களின் மேலாண்மையை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதியான செயல்களை நிரூபித்துள்ளது.

இந்த முயற்சிகள் மூலம் நிலையான மற்றும் அனைவருக்கும் ஒருங்கிணைந்த நகர போக்குவரத்து முறையை உருவாக்கும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முழுமையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கிய சாதனைகளாக மின் சக்தி பயன்படுத்தும் திறனை மேம்படுத்தல், தண்ணீர் மேலாண்மை முறைகளை பலப்படுத்தல் மற்றும் கார்பன் உமிழ்வை குறைத்தல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் திட்டத்தின் கட்டுமான மற்றும் இயக்க காலங்களில் செயல்பாட்டு செயல்திறனை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் வகையிலும் பணியாற்றுகின்றன. இந்த முயற்சிகள் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாலின சமத்துவம் மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமைத்துள்ளது.

மேலும் இது சென்னை மெட்ரோ பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, நம்பகமான, வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரம், தனது செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களின் அனைத்து நிலைகளிலும் சுற்றுச்சூழல் சிந்தனையை ஒருங்கிணைத்து செயல்படும் சிறந்த தலைமைத்துவத்தையும் சிறப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.