Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 29,455 தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு இலவச உணவு: ரூ.187 கோடி ஒதுக்கீடு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 29,455 தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்க ரூ.187 கோடி ஒதுக்கி உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கடந்த 14.8.2025 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ``தூய்மைப்பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று கூறி இருந்தார். இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பை சென்னை மாநகராட்சி ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதன்படி, 29,455 தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதிய, இரவு உணவு வழங்க ரூ.186 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரத்து 969 செலவாகும். இந்த செலவு தொகை பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். இந்த திட்ட பணிகளை கண்காணிக்க ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்படுவார். இந்த தொகை 6வது மாநில நிதி ஆணைய மானிய நிதியில் இருந்து மேற்கொள்ள மன்றத்தின் அனுமதியை பெற்ற பிறகு அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடும். அனைத்து உணவுகளும் FSSAI சான்றளிக்கப்பட்ட சமையலறைகளில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.