Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திராட்சை கொடிகளுக்கு பதிலாக மாற்றத்தை நோக்கி கம்பம் பள்ளத்தாக்கில் பேமஸாகுது ‘பேஷன் ஃபுரூட்’

Cumbum, grapes, passion fruit* பயிற்சி வழங்க விவசாயிகள் கோரிக்கை

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சைகளுக்கு பதிலாக மாற்று பயிருக்கு மாறி வரும் நேரத்தில், லாபம் தரும் பேஷன் ஃபுரூட்டை பயிரிடுவதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர்,கம்பம், சுருளிப்பட்டி, குள்ளப்புகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அனுமந்தன்பட்டி, தென்பழனி, மூர்த்திநாயக்கன்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திராட்சை பழங்கள் சாகுபடி நடக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஆண்டு முழுவதும் இங்கு திராட்சை பழங்கள் விளைச்சல் அடைகிறது.

ஆண்டின் அனைத்து நாட்களிலும் பழங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பது இல்லை. எல்லா சீசன்களிலும் உற்பத்தி செலவில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத போதிலும், விலையில் கடும் வீழ்ச்சியை சந்திப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே திராட்சை கொடிகளை அகற்றிவிட்டு மாற்றுப் பயிரான புடலை, பாவை, கோவை உள்ளிட்ட கொடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றம் தேவை: சில விவசாயிகள் சமீப காலமாக ‘பேஷன் ஃபுரூட்’ எனப்படும் மருத்துவ குணமிக்க பழங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் திராட்சை கொடிகளை அகற்றிவிட்டு ‘பேஷன் ஃபுரூட்’ பழம் சாகுபடி செய்துள்ளனர். அதன்படி கம்பம் அருகேயுள்ள ஆங்கூர்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் பேசன் ஃபுரூட் பழங்கள் கொடியில் தொங்குகின்றன.

பிரேசிலில் பிறந்து.. கம்பத்தில் வளர்கிறது... மிகப் பழைமையான ஒரு பழவகைதான் இந்த பேஷன் ஃபுரூட். இந்தப் பழம் `பேசிஃப்ளோரா’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது, `பேசிஃப்ளோரா எடூலிஸ்’ என்பது இதன் அறிவியல் பெயராகும். தமிழில் கொடித்தோடை என்று அழைக்கப்படும் இந்தப் பழம் இந்தியா மற்றும் பிரேசிலை தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், வயநாடு போன்ற மலைப்பகுதிகளில் அதிகமாகவும் மற்ற நிலப்பகுதிகளிலும் விளைகிறது.

90நாள் கெடாது கேரண்டி: இப்பழத்திலிருந்து போஷாக்கு நிறைந்த, மருத்துவ குணமுடைய மற்றும் சுவை மிகுந்த ஜீஸ் கிடைப்பதால் வர்த்தக ரீதியாக முக்கியமான பழம் இது. ஜூஸ் தயாரிப்பதற்கு மட்டுமல்லாது, ஐஸ் கிரீம், கேக் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் இதன் இலைகள் மருந்துக்காகவும் அதிகம் பயன்படுகிறது. இது வட்டவடிவிலான தோற்றத்தைக்கொண்டது. இப்பழம் 90 நாள்கள் வரை கெடாமலிருக்கும், இதன் தோல் சுருங்கினாலும் பழத்தின் சுவை மாறாது. இப்பழத்தின் தோல் பகுதியைத் தவிர்த்து நடுப்பகுதியை சாப்பிடலாம்.

ஒரு கொடியில் 250 பழங்கள்: இப்பழங்கள் கொடிகளில் விளைகிறது, அக்கொடிகள் ஐந்து ஆண்டுகள் வரை நின்று பயனளிக்கக்கூடியது. இதன் வேரானது ஈரப்பதம் குறைந்த மண்ணிலும்கூட ஆழமாக வேரிடுகிறது, குறிப்பாகக் குளிர்ச்சியான சூழல்களில் நன்கு வளர்கிறது. ஒரு கொடியை நட்ட பத்து மாதங்களில் பழம் உருவாகிறது, 80-ல் இருந்து 90 நாள்களில் நன்கு வளர்ச்சியடைந்து விடுகிறது. ஃபேஷன் ஃபுரூட் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் கிடைக்கும், மற்ற மாதங்களில் கிடைத்தாலும் இந்த சீசன் சமயங்களில் கிடைக்கும் பழத்துக்கு அதிக வரவேற்பு. இந்தப் பழமானது மஞ்சள், ஊதா, சிவப்பு, பிங்க் போன்ற நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது.

மண்ணின் தன்மை தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து இவ்வாறான நிறங்களில் காணப்படுகிறது. ஒரு வருடத்துக்கு ஒரு கொடியிலிருந்து 8 முதல் 9 கிலோ வரை 200 முதல் 250 பழங்கள் வரை எதிர்பார்க்கலாம். ஓர் ஏக்கருக்கு ஒவ்வொரு செடிக்கும் இடையில் 3 மீட்டர் இடைவெளியிட்டு நடுவதால் 1100 செடிகள் வரை நடலாம். நடவு செய்து முதல் ஒரு வருடத்துக்கு இதன் இடையில் ஊடு பயிரிடலாம்.

பயிற்சி வழங்க வேண்டும்: புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பழங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் பழமாக இது உள்ளது.

மேலும் மதிப்பு கூட்டு பொருளாக குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதால் கேரளாவை சேர்ந்த வியபாரிகள் தோட்டங்களில் நேரடியாக கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே பேஷன் ஃபுரூட் பழம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தோட்டகலைத்துறையினர் ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சிகள் வழங்கினால் பேசன் புரூட் பழம் சாகுபடி அதிகரிக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிமான்ட் இருக்கு பாஸ்

கென்யாவில் மஞ்சள் நிற ஃபேஷன் ஃபுரூட் மூலம் அதிக லாபம் பார்க்கின்றனர். மஞ்சள் ஃபேஷன் ஃபுரூட்டில் தயாரிக்கப்படும் ஜூஸுக்கு அங்கு தேவை அதிகமாக உள்ளது. அங்கு ஊதா நிற ஃபுரூட்டை விட மஞ்சள் நிற ஃபுரூட்டைத்தான் அதிகம் விரும்புகின்றனர். மஞ்சள் நிற ஃபேஷன் ஃபுரூட்டானது குறைந்த வெப்ப நிலையிலும், ஊதா நிற பழத்தைவிட அளவில் பெரியதாகவும் காணப்படுகிறது. இதன் எடை 60 முதல் 65 கிராம் வரை இருக்கும். பர்ப்பிள் கலர் ஃபுரூட் அதிக மனமாக இருக்கும். இதன் எடை 35 முதல் 50 கிராம் வரை இருக்கும்.

பேஷன் ஃபுரூட்டில் பேஷான நன்மைகள்

பேஷன் ஃபுரூட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்து, இதய நோய்கள் வரும் ஆபத்தை தடுக்கின்றன. தரமான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது ஆரோக்கியமான செரிமானத்தைத் தரவல்லது; மலச்சிக்கலையும் தவிர்க்கக் கூடியது.இதிலுள்ள ஒரு வகை கூட்டுப் பொருளானது மனதுக்கு அமைதி தந்து, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் பெற உதவுகிறது. நரம்புகளின் ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. பேஷன் ஃபுரூட்டில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி குணமானது உடலிலுள்ள வீக்கங்களைக் குறைத்து ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களின் தீவிரத்தைக் குறைக்கிறது.