Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாமகவில் மோதல் உச்சக்கட்டத்தில் இருந்து வரும் வேளையில் ராமதாஸை சந்திக்க வந்த பேத்திகள்: அன்புமணி சமாதான தூது விட்டாரா?

சென்னை: பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச்சக்கட்டத்தில் இருந்து வரும் வேளையில், சென்னை வந்துள்ள தாத்தா ராமதாஸை பேத்திகள் சந்தித்து பேசியுள்ளனர். தனது மகள்களை அன்புமணி சமாதான தூது விட்டாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பாமகவில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது. இதை அடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ள வரை நான் தான் பாமக தலைவர் என்றும், அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும்.

ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களை சந்திக்கவில்லை. அவர்களிடம் நான் தொடர்ந்து கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். ரத்தம் மற்றும் மற்ற செக்கப் பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். நான் பாலோ பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன் என்று மட்டும் ராமதாஸ் பதில் அளித்தார். அதே நேரத்தில் தந்தையிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் என்ன கட்டளையிட்டாலும் அதற்கு நான் தயார் என்று அன்புமணி கூறியுள்ளார்.

நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதுவே போதும் என்று நினைக்கிறீர்களா?. என்று ராமதாஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், அதற்கான முடிவு போக, போக தெரியும் என்ற பாடலை மட்டும் பாடி விட்டு சென்றார். இந்த நிலையில் அன்புமணியின் மகள்கள் சென்னையில் தங்கியுள்ள ராமதாஸை சந்திப்பதற்காக வந்தனர். 2 பேரும் தாத்தாவை சந்தித்து பேசினர். பேத்திகள் சந்திப்பு தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அன்புமணி விவகாரத்தில், ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதால், சமாதானம் செய்யும் வகையில் மகள்களை அன்புமணி அனுப்பி வைத்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ராமதாஸ், ” என் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கோ, அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும்.

வாரிசு கிடையாது அரசியலில் வாரிசு என்பதே கிடையாது. என்னிடம் கெஞ்சி கூத்தாடி வாதாடி தர்மபுரியில் சவுமியா போட்டியிட்டார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டுமல்லாமல் நடைபெற்ற பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணியின் 2 மகள்களும் பங்கேற்றனர். இதுவும் ராமதாஸ்க்கு பிடிக்கவில்ைல என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பேத்திகள் ராமதாஸை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.