சமர்க்கண்ட்: கிராண்ட் ஸ்விஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. 11 சுற்றுகள் முடிவில் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியும், ரஷ்ய வீராங்கனை கேதரினா லாக்னோவும், 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இருப்பினும், டைபிரேக்கர் ஸ்கோர் அதிகமாக பெற்றிருந்த வைஷாலி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இதையடுத்து, வரும் 2026ல் நடக்கவுள்ள மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்குபெற, வைஷாலி தகுதி பெற்றார். இதற்கு முன், ஜார்ஜியாவில் நடந்த மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், இறுதிப் போட்டியில் ஆடிய கொனேரு ஹம்பி, ஏற்கனவே மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளனர். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் வெல்லும் வீராங்கனை, தற்போதைய உலக செஸ் சாம்பியனான, சீன கிராண்ட் மாஸ்டர் ஜு வென்ஜுன் உடன் மோதுவார். அதில் வெற்றி பெறுபவர், அடுத்த மகளிர் செஸ் சாம்பயனாக உருவெடுப்பார்.