Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வா? ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்: மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக்கொள்கை

சென்னை: பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை திணிக்க நினைப்பது அநீதியான செயல் என ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை அறிவதற்காக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

12ம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவை படித்தாலும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பட்டப்படிப்பு படிப்பதற்கான கால அளவை மாணவர்களே குறைத்துக் கொள்ளவும், நீட்டித்துக் கொள்ளவும் முடியும் என்பதைத்தான் பல்கலைக்கழக மானியக் குழு மக்கள் முன் வைத்திருக்கும் புதிய யோசனைகளாகும்.

12ம் வகுப்பில் ஒரு பாடப்பிரிவை படித்தவர்கள் பட்டப்படிப்பில் வேறு பாடத்தை படிக்க வேண்டும் என்றால், அதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 12ம் வகுப்பில் படித்த படிப்பையே கல்லூரியிலும் படிக்க நுழைவுத்தேர்வு தேவையா என்பது குறித்து வரைவு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை வாயிலாக சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று கடந்த ஜூன் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் எந்த மாற்றமாக இருந்தாலும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மானியக்குழு அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, பல்கலைக்கழக மானியக்குழு இப்போது அறிவித்திருக்கும் அனைத்து சீர்திருத்தங்களும் மாணவர்களை நுழைவுத் தேர்வு முறைக்கு கொண்டு வருவதற்கான செயல்தான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நுழைவுத்தேர்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியாக புதியபுதிய வடிவங்களில் நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி விடும்.

ஏற்கனவே நீட் தேர்வால் பல மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பட்டப்படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க நடவடிக்கைகள் எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.