Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஒன்றிய பட்ஜெட்டில் பல வரலாற்று அறிவிப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடியுள்ளது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்றினார்.

இதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்த அவரை துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி முர்மு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது, அவருக்கு முன்பாக ஒருவர் செங்கோலை ஏந்திச் சென்றார். பின்னர் செங்கோல் உரிய இடத்தில் நிறுவப்பட்டது. அதன் பின், ஜனாதிபதி முர்மு தனது 50 நிமிட உரையில் பல்வேறு அரசு செயல்பாடுகளுடன், எமர்ஜென்சி குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் தனது உரையில் கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்காக, கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் தொடர்ந்து 3வது முறையாக ஒரு நிலையான அரசை, தெளிவான பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்துள்ளனர். வரவிருக்கும் கூட்டத் தொடரில் எனது அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில், மிகப் பெரிய பொருளாதார சமூக முடிவுகளுடன் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும் காணலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்திலிருந்து, 5வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இப்போது உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. வடகிழக்கில் அமைதியை நிலைநிறுத்த அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. வடகிழக்கின் பிரச்னைக்குரிய பகுதிகளில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் மூலம் படிப்படியாக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான பணியும் நடைபெறுகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களும் இணைக்கப்பட்டு கட்டணமில்லா சிகிச்சைப் பலனைப் பெறுகிறார்கள். முதல்முறையாக, ஏப்ரல் மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது மாநிலங்களையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறையை தற்சார்புடையதாக மாற்ற, அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

அண்மையில் சில தேர்வுகளின் போது வினாத்தாள் கசிந்த விவகாரத்தைப் பொருத்தவரை, நேர்மையான விசாரணையை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும், அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாடு தழுவிய அளவில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு எதிராக, நாடாளுமன்றமும் கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் தண்டிக்கும் மனப்பான்மையை மாற்றி, தண்டனையை விட, நியாயத்திற்கு முன்னுரிமை பெறுவதோடு, புதிய சட்டங்கள் அமைந்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம், அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மையை உறுதி செய்ய, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில தசாப்தங்களில் உச்சநீதிமன்றம் முதல் மக்கள் நீதிமன்றம் வரை அனைத்து சோதனைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வெற்றி பெற்றுள்ளது. 1975 ஜூன் 25 அன்று அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயமாகும். இதனால் நாடே கொதித்துப் போனது. ஆனால் குடியரசின் பாரம்பரியம் இந்தியாவின் மையத்தில் இருப்பதால் அத்தகைய அரசியலமைப்பற்ற சக்திகளை எதிர்த்து நாடு வெற்றி பெற்றது.

எனது அரசும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வெறும் ஆட்சி ஊடகமாகக் கருதவில்லை; மாறாக, நமது அரசியலமைப்புச் சட்டம், பொதுமக்களின் உணர்வின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, , நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு தினமாக அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றம் தனது அலுவல்களை சுமூகமாக நடத்தும் போது, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் போது, தொலைநோக்குப் பார்வை கொண்ட முடிவுகள் எடுக்கப்படும் போது, மக்களுக்கு அரசின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கடமைகளில் முழு அர்ப்பணிப்புடன், தேசிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவோம், இந்தியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் விவகாரத்தை இன்று கிளப்ப முடிவு

* ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் எம்பியாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பதவியேற்றுக் கொண்டார்.

* மொத்தம் 542 எம்பிக்களில் சிறையில் உள்ள 2 பேர் உட்பட 5 பேர் இன்னமும் பதவியேற்கவில்லை.

* ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்க உள்ளது.

* இதில் நீட் முறைகேடு தொடர்பான பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீட் தொடர்பாக பதிலளிக்க அரசு தரப்பு தயாராக இருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

* வடகிழக்கு மாநிலங்கள் பற்றி ஜனாதிபதி பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தை பற்றி எந்த கருத்தும் கூறாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* பாஜ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் இடம் பெறவில்லை.