Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடைந்தது. கல்லூரியில் சேர விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்றது.

இதில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25ம் கல்வியாண்டுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதன்படி, தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வு வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.