தொடரும் கச்சத்தீவு பிரச்னை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
சென்னை: மீனவர்களின் நீடித்த பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்துக்கு நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். அவர்களின் நிலை மீது ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.
நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974ம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.
இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், ஒன்றிய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது நல்லது.