Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட்கள் கண்டனம்

சென்னை: காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் அநாகரிகமான பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்: மார்க்ஸ் மட்டுமல்ல, எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைப்பாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேரை மட்டும் தெரிந்துகொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.

வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: காரல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர் என்று அநாகரிகமாக பேசியுள்ளார் ஆளுநர். இது கடும் கண்டனத்திற்குரியது. கம்யூனிச எதிர்ப்பு பித்தம் தலைக்கேறியவராய் உண்மைக்கு மாறான கருத்துகளை உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார். இந்திய விடுதலை போராட்டத்தில் சிறிதளவும் பங்கெடுக்காத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வாரிசான ஆர்.என்.ரவி, இந்திய விடுதலையை ஆதரித்த மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர். கம்யூனிச எதிர்ப்பு நஞ்சை கக்கும் ஆர்.என்.ரவிக்களின் மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் சதிகளை, தமிழக மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.