Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த செல்வப்பெருந்தகை!!

சென்னை: மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டை, தரத்தை பொய்யான வகையில் திரிக்கும் நோக்கத்துடன் ஆளுநர் அவர்களின் கருத்து இருக்கிறது. மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் கல்வித் தரம் பற்றி என்ன தெரியும் அவருக்கு?,மற்ற நாகரீங்கள் ஆடை உடுத்த அறியும் முன்பே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தொல்குடி தமிழ்குடி. தமிழர்களின் பலமான கல்வி, அறிவு, ஆற்றல், பகுத்தறிவு எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்என்.ரவி போன்றவர்களின் தலையாய பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது. இப்பொழுதும் இருக்கிறது. அந்த வன்மத்தைதான் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உமிழ்ந்து வருகிறார். படித்தால் போதுமா? அறிவு திறமை இருக்கிறதா? என்ற அவரின் கேள்வி நகைப்புக்குறியது மட்டுமல்லாமல் தற்க்குறித்தனமானது.

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல முக்கிய அரசு பல்கலைக்கழகங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்திடமிருந்து ‘A’ அல்லது ‘A+’ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இவை கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது என்ற கூற்றை முழுமையாக மறுக்கும் ஆதாரமாகும். கடந்த 5 ஆண்டுகளில், தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் மட்டும் தரமான ஆய்வுகளின் அடிப்படையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின் கீழ் ஆய்வுகளை நடத்துகின்றன.

உலகின் முன்னணி நிறுவனங்களில் (ஹார்வர்ட், எம்.ஐ.டி., ஸ்டான்போர்ட் போன்ற) தலைமைப் பொறுப்பில், அதிகாரப் பொறுப்பில் பணிபுரியும் இந்தியர்களில் ஒரு பெரிய பகுதியினர் தமிழர்களே. உதாரணமாக, தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியின் அடித்தளத்தில் இருந்து, அரசு பள்ளிகளில் படித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சர் சி.வி. ராமன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் சாதனை படைத்துள்ளனர்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக” இவர்களை குறிப்பிட்டு காட்ட வேண்டியிருக்கிறது. ஆளுநர் அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு இந்தியா பட்டியலில் (2020-21) ‘தரமான கல்வி” பிரிவில் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் தரக் குறியீடு (SEQI) நிதி ஆயோக் தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரம், தத்துவார்த்தம், ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் மேம்பாடு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கிறது.

கல்விக்காகத் தமிழக அரசு இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடுகிறது, ஒவ்வொரு ஆண்டும் கல்விக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கே தனியாக ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடுகிறது. இந்த நிதி, அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆய்வுப் பணிகளுக்கு நேரடியாக செல்கிறது.

தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், ‘அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை” என ஆளுநர் பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு. இது தமிழ்நாட்டின் கல்வி மரபை இருட்டடிப்பு செய்யும் இழிவான நோக்கம் கொண்ட செயலாகும்.

ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் தொடர்ந்து பகிரப்படும் இவ்வகையான வாக்குமூலங்கள், கல்வியின் மீது மட்டுமல்ல, ஜனநாயகப் பதவிகளின் மீது சாமனியர்களுக்கு இருக்க வேண்டிய மரியாதையையும் இழக்கச் செய்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்கால தலைமுறையினரின் கல்வியில் கைவைத்துப் பேசுவது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

உடனடியாக, ஆளுநர் இந்த அவமதிப்பான கருத்தை வாபஸ் பெற்று, தமிழக மக்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக, ஜனநாயக வழியிலான எதிர்ப்பு மேலும் வலுப்பெறும் என்பதை எச்சரிக்கின்றோம். ஆளுநர் போன்றோரின் இதுபோன்ற இட்டுக்கட்டு கதைகள் நாளைய வரலாறாக மாறும் அபாயம் இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், பன்னாட்டு தமிழர்கள் போன்றோரின் உணர்வுகளை பாதிக்கும் ஆளுநரின் இத்தகைய கருத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.