சென்னை: ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேர 2ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2025-26ம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு 2ம் இறுதி கட்ட காலியிட மாணவர் சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான புதிய விண்ணப்பப் படிவங்கள் இணையவழியில் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை ”www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org” என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் இன்றும், நாளையும் பதிவு செய்யலாம். அதேபோன்று, 2025-26ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு; அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான புதிய விண்ணப்பப் படிவங்கள் இணையவழியில் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.


