மதுரை: அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஒப்பந்ததாரரை ஏமாற்றி ரூ.22 கோடி வரை மோசடி செய்த புகாரின்பேரில், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் உள்பட 5 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரை தனக்கன்குளத்தில் உள்ள கார்த்திகா நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். அரசு ஒப்பந்ததாரர். இவர், அதிமுக ஆட்சிக் காலத்தில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான சக்திவேல் என்பவரின் பெயரில் பணிகளை எடுத்து செய்துள்ளார்.
பில் தொகை சக்திவேல் பெயரில் வந்துள்ளது. பழனிக்குமார் தான் செய்த வேலைகளுக்கு சக்திவேலிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளார். மேலும், தொழிலுக்காக சக்திவேலிடம் கந்துவட்டிக்கும் பழனிக்குமார் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017 முதல் 2022 வரை ரூ.22 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்த வேலைகளை, சக்திவேல் பெயரில் பழனிக்குமார் எடுத்துச் செய்துள்ளார். ஆனால், பில் தொகையில் ரூ.3.19 கோடி வரை மட்டுமே கொடுத்துள்ளதாக பாக்கி தொகையை சக்திவேலும், அவரது குடும்பத்தினரும் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிக்குமார் அளித்த புகாரில், ‘சக்திவேல் பெயரில் ரூ.22 கோடி வரை அரசு வேலைகளை ஒப்பந்த முறையில் எடுத்துச் செய்துள்ளேன். இந்நிலையில், சக்திவேல், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி மற்றும் ராஜலட்சுமி, சதீஷ், சங்கர் ஆகியோர் அரசு அலுவலகங்களில் பொய்யான பில்கள் மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.22 கோடியை பெற்று மோசடி செய்துள்ளனர்.
மேலும், என்னிடம் நிரப்பப்படாத ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். எனக்கு வரவேண்டிய பணத்தை சக்திவேலிடம் கேட்டபோது என்னையும், எனது குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதன்பேரில், மதுரை மாநகர மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளான சக்திவேல், கருப்பசாமி மற்றும் ராஜலட்சுமி, சதீஷ், சங்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.