Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு சேவைகளை எளிதாக அறியும் வகையில் உழவரைத்தேடி,எளிமை ஆளுமை திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: உழவர்கள், பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உழவரைத் தேடி மற்றும் எளிமை ஆளுமை ஆகிய இரண்டு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் உள்ள 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

விவசாயிகளை சந்திக்கும் இந்த குழுவில், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழுவினர் விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, பரப்பு, சாகுபடி, மகசூல் குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள். மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் ‘எளிமை ஆளுமை’ திட்டம் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு செயல்பாடுகளை திறம்பட மேம்படுத்துவதோடு, குடிமக்களுக்கு தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும். மேலும், இந்த திட்டம் மூலம் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி உரிமம், மகளிர் இல்லங்களுக்கான உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், முதியோர் இல்லங்கள் உரிமம், நன்னடத்தை சான்றிதழ், அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியும்.

இந்த இரண்டு திட்டங்களையும் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர், அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.