அரசு, தன்னார்வ ஊழியர்களின் மாணவர் கடன் சலுகையை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: அமெரிக்காவில் அடுத்த அதிரடி
வாஷிங்டன்: சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு, தன்னார்வ ஊழியர்களுக்கு இனி மாணவர் கடன் சலுகை வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரிவதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 2007ம் ஆண்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி அரசு மற்றும் தன்னார் அமைப்புகளில் பொதுச் சேவையாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாணவர் கடனை 10 ஆண்டுகள் முறையாக திருப்பி செலுத்தினால் எஞ்சிய காலத்திற்கு அவர்களின் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதன் மூலம் ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மத போதகர்கள் மற்றும் என்ஜிஓக்களில் பணியாற்றுபவர்கள் பலன் அடைந்தனர். கல்வித் துறையின் டிசம்பர் மாத தரவுகளின்படி, 20 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் மாணவர் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர். இந்நிலையில், இந்த சலுகைக்கும் அதிபர் டிரம்ப் வேட்டு வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, சட்டவிரோத குடியேற்றம், வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு உள்ளிட்ட பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஊழியர்களுக்கு மாணவர் கடன் ரத்து திட்டம் செல்லுபடியாகாது. இதற்கு அரசியல் ரீதியாக பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என தேசிய மாணவர் சட்ட பாதுகாப்பு அமைப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.
இதுபோல, அதிபர் டிரம்ப்பின் வரியை உயர்த்துதல், அரசு ஊழியர்களை குறைத்தல், அரசு துறைகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் பொருளாதார மந்தநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
* அதிபர் டிரம்ப் அழைப்பை நிராகரிக்கும் இஸ்லாமிய நாடுகள்
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் சிறப்பு கூட்டம் சவுதி நகரமான ஜெட்டாவில் நடைபெற்றது. இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான 7 வார கால போர் நிறுத்தம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நேரத்தில் காசாவின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை எதிர்கொள்ளும் நோக்கத்தில் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட அரபு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிபர் டிரம்பின்பெயரை குறிப்பிடாமல் பாலஸ்தீன மக்களை தனித்தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடம்பெயர செய்யும் திட்டங்கள் நிராகரிக்கப்படும். இன அழிப்பு சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்று கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


