அரசு பள்ளிக்குள் இரவில் நுழைந்து அட்டகாசம் சரக்குக்கு சைட்-டிஷ்ஷாக சத்துணவு முட்டையை ருசிபார்த்த குடிமகன்கள்
* போதையில் வகுப்பறையும் நாசம் * காரைக்குடி அருகே அதிர்ச்சி
காரைக்குடி : காரைக்குடி அருகே இரவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள் மது அருந்தி விட்டு சத்துணவு முட்டைகளை அவித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலங்குடி மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இரவில் பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள், சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சாகவாசமாக அமர்ந்து மது அருந்தியதோடு, சத்துணவு முட்டைகளை காஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டுள்ளனர்.போதை தலைக்கேறியதும் அருகே உள்ள வகுப்பறையில் நுழைந்து சேர்களை உடைத்ததோடு, ஸ்மார்ட் கிளாஸ் ப்ரொஜெக்டர் ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுவிட்டனர்.
நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறை அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த நாச்சியார்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பள்ளிக்குள் நுழைந்த குடிமகன்கள் சத்துணவு முட்டைகளை அவித்து சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


