Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமயம் பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து நிவாரணம் வழங்க வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

திருமயம் : திருமயம் அருகே ஒரு வாரமாக நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் திருமயம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை காலம் தவறி பெய்து வருகிறது.

இருந்தபோதிலும் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்க்காமல் முன்கூட்டியே பருவத்தில் நடவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இன்னல்களை சந்தித்து சம்பா நடவு பணிகளை தொடங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் பருவமழை காலதாமதமாக பெய்வதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்புகள் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பருவம் தவறி விவசாயம் செய்தால் இயற்கை சீற்றத்தில் இருந்து விளை பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் நடப்பு ஆண்டும் பருவ மழை எதிர்பார்த்து விவசாயிகள் அரிமளம், திருமயம் பகுதிகளில் முன்கூட்டியே சம்பா நடவுப் பணிகளை முடித்துவிட்ட நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக விவசாயிகளுக்கு சாதகமும், பாதகமும் ஏற்பட்டுள்ளது.

இதில் சாதகம் என்றால் பருவமழை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு தற்போது பெய்துள்ள மழை சாதகமாகவும், மழைநீர் நீர்நிலைகளில் தேங்கி விவசாய நிலங்களை மூழ்கடித்து விளை பயிர்களை அழுகச் செய்வது பாதகமாகவும் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில்புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி அதிகாரிப்பட்டி, புலிவலம் ஊராட்சி கடம்பப்பட்டி சொக்கநாதபட்டி ஆகிய கிராமங்கள் அரிமளம், திருமயம் ஒன்றிய எல்லையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் திருமயம் பகுதியில் பெய்த மழை காரணமாக சொக்கநாதம்பட்டி பெரிய கண்மாய் நிரம்பியது. இதனால் அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளாவயல், திருமயம் ஒன்றியம் கடம்பபட்டி கிராம கடம்பவயல், சொக்கநாதபட்டி வயல்களில் மொத்தமாக சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா நெற்பயிர்கள் கண்மாய் நீரில் கடந்த ஒரு வாரமாக மூழ்கிய நிலையில் உள்ளது. இதே நிலை மேலும் தொடர்ந்தால் வரும் நாட்களில் பருவ மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பயிர்கள் நடவு பணி செய்து மூன்று மாதங்களை கடந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் நெற்கதிர் வெளியே தள்ளும் சமயத்தில் இது போன்று நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் பெருமளவு சேதம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பொருள், பணம் செலவு செய்த விவசாயிகள் செய்வது அறியாது திணறி வருகின்றனர்.

எனவே திருமயம், அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ள பயிர்களை ஆய்வு மேற்கொண்டு பாதிப்புகளை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.