Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு பேருந்துகளில் `தமிழ்நாடு’ 2012ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர்: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு பேருந்துகளில் `தமிழ்நாடு’ என்ற வார்த்தை 2012ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு அடிப்படை வசதிகள் துவக்க நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதாக சமீப காலமாக ஒரு சர்ச்சை பரப்பப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்று தற்போது உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் என்று எழுதினால் மிகவும் நீண்டதாக உள்ளது என்று அதிமுக ஆட்சி காலத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இது மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆன நிலையில் ஏதோ புதிய செய்தி போல சிலர் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் பேருந்து பழைய பேருந்தாக உள்ளது என்றார்கள். ஆனால் முதல்வர் புதிய பேருந்துகளை அதிகம் வாங்கி பழைய பேருந்து மாற்றப்பட்டு உள்ளது.

இன்னும் புதிய பேருந்துகள் வர உள்ளது. அதே போல அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் எல்லாம், மீண்டும் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்கள், பல இடங்களில் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்படி எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட பிறகு எதை குற்றம் சாட்டுவது என்று தெரியாமல், திடீர் என்று தமிழ்நாடு இல்லை என்று குற்றத்தை கண்டுபிடித்து உள்ளனர். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்.

எனவே எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. ஒரு ஆட்சியில் ஒன்று நடந்தால், அடுத்த ஆட்சி வந்தவுடன் மாற்றப்பட்டு விடுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் என்பதால்தான் அந்த பெயர் மாற்றப்படாமல் அப்படியே விட்டுவிட்டோம். இன்னொருபுறம் இந்த பெயர் எளிதாக உள்ளது என்று போக்குவரத்து பணியாளர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே அப்படியே பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.