கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பிலான குத்துச்சண்டை மைதானத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பிலான குத்துச்சண்டை மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சென்னையை உலக அளவிலான விளையாட்டு நகரமாக நிறுவி, உலகளாவிய போட்டிகளுக்கு சிறந்த இடமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில் அமைவதுதான் கோபாலபுரத்தில் ரூ. 7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சிமையம். இப்பயிற்சி மையத்தின் கட்டட பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் இன்று (16.07.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டரங்கங்களை அமைத்துள்ளது. அவ்விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்றப் தொகுதிகளில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்க கட்டட பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். நா. எழிலன். தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர். ஜெ. மேகநாத ரெட்டி. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .