Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறந்த ஆட்சி, பண்பு, நலன்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு: அரசியல், வெளிநாட்டு தலைவர்கள், ஊடகங்கள் புகழாரம்

சென்னை: இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும், வெளிநாட்டு தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வருவதைப்போல, தலைவர்களும், ஊடகங்களும் முதலமைச்சரின் பண்பு நலன்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டுகள் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய குணநலன்கள், ஆட்சி சிறப்பு ஆகியவற்றை தமிழ்நாடு மாநில பாஜ கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “என்னைப் பொறுத்தவரை முதல்வரிடம் கேட்டால் எதையும் நிச்சயமாக செய்யக்கூடியவர். என்னுடைய தொகுதிக்கு பாலங்கள், சாலைகள், கல்லூரிகள் ஆகியவற்றையெல்லாம் செய்திருக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் குணநலன்களை குறித்து நயினார் நாகேந்திரன் பாராட்டி கூறியுள்ளது புதுமையல்ல; முதல்வருடைய மனம் எப்போழுதும் நன்மையையே விரும்பக்கூடியது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பள்ளி கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அந்த பைகளை பயன்படுத்த வேண்டாம்;

முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் புதிய பைகள் தயாரித்து வழங்கலாம் என்று முடிவு செய்துவிட்டனர். அதுகுறித்த விவரம் தம் கவனத்திற்கு வந்தவுடன், பள்ளி மாணவ, மாணவிகளின் பைகளில் முன்னாள் முதல்வர்களின் படங்களே இருக்கட்டும். என் படத்தை பயன்படுத்த வேண்டாம். அதற்கு ஆகும் செலவை மாணவ, மாணவிகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறி முன்னாள் முதல்வர்கள் படங்கள் அச்சிடப்பட்ட பைகளையே மாணவ, மாணவிகளுக்கு வழங்க செய்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பாராட்டு சான்றிதழ்களில் முதல்வரான தன் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்தார். இதுமட்டுமல்ல; முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அரசியல் பாகுபாடு இல்லாமல் பொது நோக்கத்துடன் செயல்பட்டு வரும் முதல்வர் மற்றவர்களையும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்று வழிகாட்டினார். முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியானவுடன் பிற மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு முதல்வரை பாராட்டி செய்திகள் வெளியிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் தத்தம் நாடுகளில் அரசு சம்பந்தப்பட்ட பாராட்டு சான்றிதழ்களில் முன்னாள் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது என முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு காரணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான் என்றும் அந்தந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அதைவிட ஒருபடி மேலாக உலக நாடுகளின் அதிபர்கள் கூடும் ஐ.நா. அவையே மு.க.ஸ்டாலினின் இந்த செயலை பாராட்டி பேச வேண்டும் என்றும், இதனால் மற்ற நாடுகளும் இந்த சுயநலமில்லாத அரசியலை பின் தொடரலாம் என்றும் ஐ.நா. அவையில் வலியுறுத்த உள்ளதாக ஐ.நா.வின் முக்கிய நிர்வாகிகள் ஊடகங்கள் வாயிலாக பேசி வருகிறார்கள் என ஒரு பிரபல யுடியூப் சேனல் 11.9.2021 அன்று காணொலியில் குறிப்பிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் ஜெயலலிதா படங்களுடன் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. அந்த உணவகங்களின் பெயர்களை மாற்றாமல் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.  நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில், ”என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகம், இதற்கு நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை;

இந்த பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிவும் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் 8ம் நாள், இந்த பல்கலைக்கழகத்திற்காக கட்டப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தேன்.

இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் 3 கோடி மானியத் தொகை 5 கோடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

இத்தகைய செய்திகளை எல்லாம் எண்ணும் பொழுது முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பாகுபாடு இல்லாமல் சமநிலையுடன் சமத்துவமான சிந்தனைகளுடன் ஆட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று விரும்புவதையும், அதன்படியே தொடர்ந்து செயல்பட்டு வருவதையும், அதனால்தான் மற்ற மாநிலங்களும், மற்ற மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் முதல்வரை போற்றி வருகிறார்கள், புகழ்கிறார்கள் என்பது விளங்கும். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரை பாராட்டியுள்ளதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாசற்ற குணநலன்கள்தான் காரணம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.