Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நல்ல செய்தி

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டு பருவ காலங்கள் தான் தேவைப்படும் மழையை தருகிறது. இதில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை பெய்யும். தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

தென்மேற்குப் பருவ மழை மே இறுதி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது. செப்டம்பர் வரை மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வழக்கத்தை விட கடும் வெயில் வாட்டி எடுத்தது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. கடும் வறட்சி ஏற்பட்டது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களின் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பி உள்ளது.  இந்நிலையில் இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே நேற்று முன்தினம்(19ம் தேதி) தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியது. வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் கர்நாடகத்தில் அதிக மழை பொழிந்து அங்குள்ள அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். அதன் மூலம் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும். வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி அல்லது அதே மாதத்தில் மேட்டூர் அணை திறந்தால் குறுவை மற்றும் சம்பா சாகுபடி துவங்க பூர்வாங்க பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள்.

டெல்டா பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரண்டு போக சாகுபடியில் ஈடுபடுவார்கள். குறுவை சாகுபடியில் சுமார் 5 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடியில் 8 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி நடக்கும். குறுவை சாகுபடி துவங்கினால் கிராமங்களில் பண புழக்கம் ஏற்படும். அதாவது விவசாய தொழிலாளர்களுக்கு தினமும் வேலை கிடைக்கும். நிலத்தை சமன்படுத்துவது, நாட்டு உரங்கள் போடுவது, ஏர் உழுவது, நாற்றங்காலில் விதை விடுவது போன்ற பணிகள் நடைபெறும்.

இந்த முதலீட்டை வைத்து சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள். பருவத்தில் சாகுபடி செய்யும்போது பூச்சிகள் தாக்காமல் நெல் உற்பத்தி அதிகரிக்கும். குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் குளம், ஏரிகளில் உள்ள உடைந்து போன ஷட்டர்களை சரி செய்வது போன்ற மராமத்து பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.  எனவே தமிழகம் முழுவதும் பெய்து வரும் கோடை மழையும், தென்மேற்கு பருவ மழையும் முன்கூட்டியே துவங்கியதால் தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக வந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.