Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வார இறுதி நாளில் எகிறியது தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: வார இறுதி நாளான நேற்று, தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் அதிரடியாக உயர தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.

அதன் பிறகு, மறுநாளில் தங்கம் விலை அதிரடி குறைவை சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.73,200க்கும் விற்றது. இந்நிலையில், வாரம் இறுதி நாளான நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290க்கும், பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320க்கும் விற்றது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல, நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.123க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,23,000 ஆகவும் விற்கப்பட்டது. இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருப்பது, ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அமெரிக்கா-ரஷியா இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடப்பது இல்லை. வரும் ஆவணி மாதம் அதிக அளவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உருவாகும் சூழ்நிலை உள்ளது’’ என்று தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.