தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது: ஆடி முதல் நாளில் ஆட்டம் காட்டிய தங்கம்; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.90ம், ஒரு சவரனுக்கு ரூ.720ம் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஒரு சவரன் ரூ.55000 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலகெங்கிலும் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இதுவும் விலை அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை முயல் வேகத்தில் ஏறுவதும் ஆமை வேகத்தில் இறங்குவதுமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 15ம்தேதி தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.54,280க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீரென அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,830க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640க்கும் விற்கப்பட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய செய்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், ஆடி முதல் நாளான நேற்று மீண்டும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்ச விலையை தொட்டது.
இந்த விலை உயர்வு நகை பிரியர்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது. அதாவது நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,920 ஆகவும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கும் விற்பனையாகிறது. அதுமட்டுமல்ல, கடந்த 8ம் தேதியில் இருந்து சவரன் ரூ.54 ஆயிரத்தில் விற்பனையாகி வந்த நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, நேற்று ரூ.55ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய விலை உயர்வு, சாமானிய மக்கள் நகை வாங்கச் செய்வதை எட்டாக் கனியாக மாற்றிவிடும் எனக் கூறப்படுகிறது.