Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹவாய் தீவுகளில் கண்டுபிடிப்பு; பூமியின் மையத்தில் இருந்து வெளியேறும் தங்கம்: ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: பூமியின் மையப் பகுதியில் தங்கம், பிளாட்டினம், ரூத்தேனியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் பெருமளவு இருப்பதாக அறியப்பட்டிருந்தாலும், இவை மனிதர்களால் எட்ட முடியாத ஆழத்தில் இருக்கின்றன. சுமார் 3,000 கிலோமீட்டர் கீழே விலைமதிப்பற்ற இந்த உலோகங்கள் உள்ளன. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, தங்கம், பிளாட்டினம், ரூத்தேனியம் போன்ற உலோகங்கள் பூமியின் மையப் பகுதியில் இருந்து மெதுவாக மேல் நோக்கிய மண் பகுதிக்கு (மேன்டில் மற்றும் க்ரஸ்ட்) கசிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைப் பாறைகளை ஆய்வு செய்த போது, பூமியின் மையப்பகுதியில் இருந்து வெளியேறிய உலோக கசிவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த எரிமலை பாறைகளில் காணப்பட்ட ரூத்தேனியம் (100Ru) என்ற உலோகத்தின் ஐசோடோப்பின் தனித்துவமான அமைப்பு, பூமியின் மையத்தில் இருந்து வந்தவை என்று உறுதி ெசய்துள்ளனர். இந்த ஆய்வின்படி, பூமியின் மையம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதன் மேல் உள்ள மேன்டில் பகுதியுடன் பொருட்களை பரிமாறிக்கொள்கிறது என்று கூறுகிறது. பூமி உருவாகும்போது, அதன் உருகிய நிலையில் கனமான உலோகங்கள் புவியீர்ப்பு விசையால் மையத்தை நோக்கி சென்று அங்கு தேங்கின. ஆனால், இப்போது மேன்டில் பகுதியில் இருந்து எரிமலை வழியாக பூமியின் மேற்பரப்புக்கு வரும் சூடான பாறைப் பொருட்கள் (மேன்டில் ப்ளூம்ஸ்), இந்த உலோகங்களை மெதுவாக மேலே கொண்டு வருகின்றன. இந்த கண்டுபிடிப்பு, பூமியின் மேற்பரப்பில் காணப்படும் தங்கம் மற்றும் பிற உலோகங்களின் தோற்றம் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், இந்த தங்கத்தை நேரடியாக பயன்படுத்துவது தற்போதைய தொழில்நுட்பத்திற்கு சாத்தியமில்லை. ஏனெனில் இவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளன. ஆனால் இந்த உலோக கசிவு, ஹவாய் போன்ற தீவு பகுதிகளில் தங்கம் மற்றும் பிற உலோகங்களின் குவிப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வின்படி, புவியியல் அறிவியலில் புதிய கண்ணோட்டத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு உருவாக்கி உள்ளது. மேலும் பூமியின் உள் இயக்கங்கள் மற்றும் உலோகங்களின் பயணம் பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது. எதிர்காலத்தில் தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களின் மூலத்தை ஆராயவும் பூகோள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.