Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்துக்கு அமோக ஆதரவு: இதுவரை 468 கோடி பயணங்கள்; 60 சதவீதபயணிகள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்; மாநில திட்டக்குழு தகவல்

சென்னை: மே 9ம் தேதிவரை 468 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் விடியல் பயண திட்டத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்த தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது.

இதை தொடர்ந்து, பதவியேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்த திட்டம், மறுநாளே நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 55 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 49 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக கடந்த மே 9ம் தேதி வரை 468 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் உட்சபட்சமாக ஒரு நாளில் 176 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில திட்டக்குழு அதிகாரிகள் கூறியதாவது: மாநில திட்டக்குழுவின் ஆரம்ப தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள், இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு குறிப்பாக உதவியதாகவும், அதில் கிடைக்கும் சேமிப்புகள் சில்லரை பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க உதவுவதாகவும் காட்டியது. விடியல் பயணம், சமூக அமைப்பில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதுடன், தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கிறது. 60 சதவீத பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று திட்டக்குழு கண்டறிந்துள்ளது. இது இளம் பெண்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதை காட்டுகிறது. மேலும் 80 சதவீத பயணிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த திட்டம் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு பெரிதும் பயனளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 55 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர்.