Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது; பொதுக்குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம்: ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

பொதுக் குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம். நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது என நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசினார். சென்னை கானத்தூரில் உள்ள தனியார் விடுதியில் பாமக தென் மாவட்ட மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று 3வது நாளாக நடந்தது. பாமக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது:

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். இன்றைக்கு அது குறித்து உங்களிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும்.

மூன்று வாரத்திற்குள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி நிறைவடைந்து எனக்கு அனுப்ப வேண்டும். முப்பதாயிரம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதை விட, கட்சிக்காக உழைக்கக் கூடிய, கட்சியில் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் அனுப்ப வேண்டும். 377 சமுதாயங்கள் சமூக நீதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையிலேயே எந்த சமுதாயத்திற்கு கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பதை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தான் தெரியவரும்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதுவும் பாமக இருக்கிற கூட்டணி தான் வெற்றி பெறும். இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமையும். தென் மாவட்டங்களில் ஒரு பிரச்னை என்றால் மருத்துவர் அய்யா அங்கு ஓடோடி வருவார். இப்போது இருக்கின்ற சின்னச் சின்ன சிறிய பிரச்னைகள் குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். இங்கு பேசும்போது, ஒருவர் நிரந்தரத் தலைவர் அன்புமணி என்று சொன்னார். இங்கு யாரும் நிரந்தரம் கிடையாது. பாமக ஒரு ஜனநாயக கட்சி. யார் தலைவராக வரவேண்டும் என்பதை பொதுக்குழு தான் தீர்மானிக்கும் பாமகவில் நிரந்தர தலைவர் யாரும் கிடையாது. பாமக ஒரு ஜனநாயக கட்சி. பொதுக் குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம். நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது. நான் தான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை. என்னை நீங்கள் தேர்வு செய்தீர்கள். ஒரு தொண்டனாக செயல்படுகிறேன்.

பாமக எல்லா மதத்திற்கும் சார்ந்த கட்சி. நம்மிடம் தெளிவான கொள்கை இருக்கிறது. நீங்கள் வேகமாக பண்ணுங்கள். எதுவாக இருந்தாலும் உங்களுடன் நான் இருக்கிறேன். தைரியமாக பண்ணுங்கள். உங்களுக்கு என்னை பத்தி நன்றாக தெரிந்திருக்கும். நான் உங்களுக்கு கட்சியிலும் சரி, வெளியிலும் சரி எந்த பிரச்னை வந்தாலும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். கடந்த 3 நாட்களில் நமக்கு நல்ல டீம் அமைந்திருக்கிறது. இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி பேசினார்.