டெல் அவீவ்: இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹவுதி படைகளும் இஸ்ரேலின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில் வடக்கு காசாவில் 5 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது குண்டுகள் வெடித்ததால் அவர்கள் பலியானதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலியான மற்றும் காயமடைந்த வீரர்களை மீட்பதற்காக சென்றவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே காசாவில் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1060 பேர் பலி- ஈரான்-இஸ்ரேல் உடனான போரின்போது பலியானவர்கள் குறித்த புதிய விவரங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. ஈரானின் தியாகிகள் மற்றும் வீரர்கள் விவகாரங்கள் அறக்கட்டளை தலைவர் சையீத் ஓஹாடி நேற்று முன்தினம் இது குறித்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நடந்த போரில் ஈரானில் 1060 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement