*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கந்தர்வகோட்டை : கந்தர்வக்கோட்டையில் கஜா புயலில் சேதமான ஹைமாஸ் லைட் சீரமைக்கப்படாமல் குப்பையில் போடப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் அரசு மருந்துவமனை அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
மருந்துவமனை அருகில் அமைக்கபட்டி ஹைமாஸ் லைட்டால் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்தி சிலை பகுதிகளில் இரவில் வெளிச்சம் இருந்து வந்தது. இதனால், நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து எந்த சிரமமும் இல்லாமல் சென்று வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலில் மருந்துவமனை அருகில் இருந்த உயர் மின் கோபுர விளக்கு கிழே சாய்ந்து விட்டது.
இதனை, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பராமரிக்க நடவடிக்கை எடுக்காமல் குப்பை மேட்டில் போட்டுள்ளனர். கந்தர்வகோட்டையின் பிரதான பகுதியாக இருக்கும் இடம் போக்குவரத்துக்கு போதிய வெளிச்சம் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகையால், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.