பல்லடம் : பல்லடம் பேருந்து நிலையம் எதிர்புறம் நேற்று தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகர் (18), புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மதன் (23), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த சுடலைமுத்து (20), துத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரிதங்கம் (24) ஆகிய நான்கு வாலிபர்கள் மது போதையில் அங்கு வந்த பப்புராஜ் என்ற வடமாநில இளைஞர் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில், வாக்குவாதம் கை கலப்பாக மாறி தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர்கள் நான்கு பேரும் அந்த வடமாநில இளைஞர்களை துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கினர். பின்னர் மது போதையில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணாடிகளை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியின் முகப்பு கண்ணாடியையும் உடைத்தனர். அதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த வட மாநில இளைஞர்கள் 2 பேர் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


