சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு: 16 பேர் விசாரணைக்கு அழைப்பு
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெட்ரோல், டீசல் நிரப்பிய டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், டீசல் நிரப்பிய 14 டேங்கர்கள், பெட்ரோல் நிரப்பிய 4 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிந்தது. இந்த விபத்து குறித்து விசாரிக்க தெற்கு ரயில்வே உயர்மட்ட விசாரணை குழு அமைத்து உள்ளது. இந்த குழுவின் தலைவராக நிதின் நார்பர்ட், துணை தலைமை சிக்னல் அதிகாரி (போக்குவரத்து) நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக முகமது ஷமீம், துணை தலைமை இயந்திர பொறியாளர் (சரக்கு), ஆர்.நாராயணன், துணை தலைமை பொறியாளர் (பொது) மற்றும் வல்லேஸ்வரா பாபுஜி தோகாலா, துணை தலைமை பாதுகாப்பு ஆணையர் (தலைமையகம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு விபத்தின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த குழு சென்னை பிரிவின் சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் மூத்த உதவி லோகோ பைலட், மங்களூரு சென்னை மெயில் (12602) லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட், திருவள்ளூர் நிலைய அதிகாரி, சரக்கு ரயிலின் வணிக மேற்பார்வையாளர் உள்ளிட்ட 16 ரயில்வே ஊழியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. மேலும், இந்த குழு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்.) நிறுவனத்தின் ஷிப்ட் சூபர்வைசரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.