Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பல கோடி மோசடி புகார்களில் தொடர்புடையவர் பாஜவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட நிகிதா: அண்ணாமலையைப் பாராட்டி தொடர் பதிவு; முருக பக்தர் மாநாட்டிலும் முக்கிய பங்கு

மதுரை: திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் புகார்தாரரான நிகிதா மீது ஏராளமான மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் பாஜ ஆதரவாளராக இருந்ததும், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை வாழ்த்தி தொடர் பதிவுகள் இட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார், தனது காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.2,500 பணத்தை திருடியதாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், விசாரித்தபோது தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மீது ஏராளமான மோசடி புகார்கள் நிலுவையில் இருப்பது விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை நிகிதா மீது தற்போது வரை ஏராளமான புகார்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. ஆசிரியர் பணி, அங்கன்வாடி உட்பட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி வரை மோசடி செய்துள்ளதும், 3 பேரை திருமணம் செய்தும், வீட்டை விற்பதாகவும் கூறி மோசடி செய்துள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் நிகிதா, தீவிர பாஜ ஆதரவாளராகவும் வலம் வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பாஜவை ஆதரித்தும், திமுக எதிர்ப்பு கருத்துக்களையும் அடிக்கடி பகிர்ந்துள்ளார். கடந்த 3ம் தேதி வரை சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்துள்ளது தெரியவந்தது. பாஜ மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது பாதயாத்திரை சென்றார். அப்போது மதுரை மாவட்ட பகுதியில் அண்ணாமலை யாத்திரையின்போது அவரை சந்தித்து படம் எடுத்துள்ளார். இதேபோல் அவரை வாழ்த்தியும் அடிக்கடி பதிவிட்டுள்ளார். இந்துத்துவா ஆதரவு கருத்துக்களையும் அதிகளவில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்பான பேச்சுக்கள் மற்றும் படங்களையும் தனது சமூக வலைத்தள கணக்குகளில் அதிகளவில் பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிலும் தனது தாயாருடன் வந்து பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டு செயல்பாடுகளில் படுதீவிரமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பேச்சுகள் மற்றும் பாஜ, இந்துத்துவா ஆதரவு வீடியோக்களையும், கருத்துக்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக தன்னை காட்டியுள்ளார்.

இதேபோல திமுக மற்றும் திராவிட கருத்தியலுக்கு எதிரான பல்வேறு விஷயங்களையும் அடிக்கடி பகிர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பொதுவாக, தமிழக அளவில் பரபரப்பான சம்பவம் நடந்தால், பிற கட்சிகளுக்கு முன்பே அவதூறாக பேசி பேட்டி அளிப்பது, வலைத்தளங்களில் சர்ச்சை வீடியோக்களை பரப்புவது போன்ற வேலைகளில் பாஜ மும்முரமாக ஈடுபடும். ஆனால், கோயில் காவலாளி வழக்கில் பெரிய அளவில் அறிக்கையோ, விமர்சனத்தையோ இதுவரை முன்வைக்கவில்லை. சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய் கூட நேரடியாக சென்று ஆறுதல் கூறிய நிலையில், நேற்றுதான் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

* நிகிதா மீது மேலும் ஒரு மோசடி புகார்

மதுரை செக்கானூரணி அருகே பூச்சம்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சிவப்பாண்டி மனைவி சுந்தரவள்ளி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு கருமாத்தூரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது, நிகிதா அறிமுகமாகியுள்ளார். அப்போது சுந்தரவள்ளியிடம், உங்கள் மகள் பிஎட் முடித்தவுடன் ஆசிரியை வேலை மதுரையில் வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய சுந்தரவள்ளி வங்கியில் தனது நகையை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ.3 லட்சம் தந்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராவில்லை. இதுகுறித்து கேட்டபோது சுந்தரவள்ளியை நிகிதா மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த அவர், தற்போது புகார் கொடுத்து உள்ளார்.

* விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: நிகிதா

பேராசிரியை நிகிதா, வெளியிட்டுள்ள புதிய ஆடியோவில் பேசியுள்ளதாவது: முதலமைச்சரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது. வேறு எந்தவிதமான சொந்த எண்ணங்களும் இல்லை. மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் முதல்வர் பதவியிலிருந்து என்ன செய்யமுடியுமோ, அதைத்தான் அஜித்குமாரின் மரணத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து எல்லாமே செய்து வருகிறார். அப்படிப்பட்டவரே ஒரு தாயின் உணர்வுகளை மதித்து ஸாரி கேட்டார் என்றால், நான் பலமுறை அஜித்குமாரின் தாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னால் நேரில் வர முடியவில்லை. கேமராக்கள் விடாமல் என்னை துரத்தி கொண்டே உள்ளது.

என்னால் வீட்டு வாசல் கதவை கூட திறக்க முடியவில்லை. என்னுடைய பர்சனல் வாழ்க்கை வரலாறு இந்த சமுதாயத்திற்கு ரொம்ப முக்கியம் கிடையாது. இவங்க கல்யாணம் பண்ணாங்க. இவங்களுக்கு குழந்தை, குட்டி இல்லை, இவங்க அப்படி இப்படினு பர்சனல் வாழ்க்கைல சேற்றை வாரி இறைப்பது என்பது, இந்த சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயம். இதனால் அவங்க என்ன தெரிஞ்சுக்க போறாங்க? நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. ரொம்ப சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி. எங்க அப்பா ஒரு நேர்மையான அதிகாரி. தெய்வத்தை நம்பி இருக்கிறோம். விதி வலியது. கடவுள் நமக்கு என்ன சொல்றாரோ அதை நாம கேட்டுப்போம். சட்டத்திற்கு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இவ்வாறு பேசியுள்ளார்.

* பொள்ளாச்சியில் நிகிதாவை மடக்கிய மக்கள் வீடியோ, ஆடியோ வைரல் கேரளாவில் பதுங்கலா?

அஜித்குமார் மரணம் மற்றும் பல்வேறு புகார்கள் தொடர்பாக பேராசிரியை நிகிதாவை, திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு வர அறிவுறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனால், பயந்து போன நிகிதா குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தலைமறைவான நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அம்மாள் மற்றும் ஒரு வாலிபரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காபி ஷாப்பில் பார்த்ததாகவும், அவர்கள் தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்ததால் பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நபர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கிறார்.

பின்னர் 2 மணி நேரம் கழித்து போலீசார் விடுவிக்க கூறியதால் விட்டு விட்டதாகவும், அவர்களது கார் கோவையை நோக்கி செல்கிறது என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஒரு வீடியோவில் ஒரு கடையில் நிகிதா மற்றும் அவரது தாய் அமர்ந்து காபி குடிப்பதுபோல் உள்ளது. ஆடியோவில் அந்த நபர் போலீசாரிடம் பேசுவது உள்ளது. இந்த வீடியோ, ஆடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், நிகிதா, அவரது தாய் சிவகாமி அம்மாள் கோவையில் பதுங்கி உள்ளனரா? அல்லது கோவை வழியாக கேரளா தப்பி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வீட்டு பட்டா, அரசு வேலை வழங்கிய முதல்வருக்கு நன்றி: அஜித்குமார் தம்பி நெகிழ்ச்சி

அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர், எனது சகோதரர் அஜித்குமாரின் மரணம் குறித்து தீவிரமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தருகிறது. உரிய முறையில் தீவிரமாக வழக்கு விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்‌. என் அம்மாவும், நானும் முதல்வரிடம் கோரிக்கை வைத்த 10 மணி நேரத்திற்குள் எங்களுக்கு வீட்டுமனை பட்டாவும், எனக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலைக்கான உத்தரவினை வழங்கி உள்ளனர்.

இத்தகைய பேருதவி செய்த தமிழக முதல்வருக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனுக்கும், எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி. எனது சகோதரன் மரணம் தொடர்பாக யாரும் எந்த அரசியல் கட்சி நிர்வாகிகளும் எந்தவித சமரசமும் பேசவில்லை. பணம் தருவதாக கூறவில்லை. தவறான தகவல்களை வேண்டுமென்றே கூறி வருகின்றனர். திமுகவினருக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே எனது சகோதரன் மரணம் குறித்து ஆறுதல் தெரிவிக்கவே திமுகவினர் வந்தனர். அஜித் மரணத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்க வேண்டாம்‌. நாங்கள் தாங்க முடியாத துயரத்தில் இருக்கிறோம். முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அஜித் மரணத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

* நிகிதாவிடமும் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்: வக்கீல் வலியுறுத்தல்

திருப்புவனத்தில் அஜித்குமார் தரப்பு வக்கீல் கணேஷ்குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அஜித்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த யார் வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்க முன்வரலாம். யாரும் அச்சப்பட வேண்டாம். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். நீதிபதி அல்லது என்னை தொடர்புகொண்டு ஆதாரங்களை அளிக்கலாம். இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதுமானது. சிபிஐ விசாரணையால் காலதாமதமாகும். நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி சுகுமார் போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். விசாரணை மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 5 பேர் மீது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட டிரைவர் ராமச்சந்திரனும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கிறோம். குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக நிகிதாவிடமும் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எங்களது தார்மீக கோரிக்கை. இவ்வாறு கூறினார்.