Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மல்யுத்த வீராங்கனையின் பாலியல் தொடர்பான போக்சோ வழக்கில் விடுவிப்பு; 100 கார், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் வெற்றி வலம் வந்து ஆர்ப்பரித்த பாஜ முன்னாள் எம்பி: ஆதங்கத்துடன் பதிவிட்ட வினேஷ் போகத்

அயோத்தி: மல்யுத்த வீராங்கனை பாலியல் தொடர்பான போக்சோ வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜ முன்னாள் எம்பி, தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் மற்றும் 100 கார்களுடன் வெற்றி வலம் வந்து ஆர்ப்பரித்தார். இதை கண்டித்து ஆதங்கத்துடன் வினேஷ் போகத் பதிவிட்டுள்ளார். பாஜ மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷன் சிங். இவர், அந்த பதவியில் இருந்த காலத்தில், பல மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்க கோரியும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீராங்கனைகள் இரவு, பகலாக டெல்லியில் போராடினர். இவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பெற்றது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர. புகார்தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால், பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான மைனர் பெண்ணின் தந்தை, தனது மகள் பொய் கூறிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பிரிஜ் பூஷன் சிங், நேற்று அயோத்தியில் 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் வெற்றி வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நகர் முழுவதும் கார்களில் வலம் வந்து, வழக்கில் இருந்து விடுதலையானதை அவர் கொண்டாடினார்.

அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் கூறும்போது, ‘என் மீது பொய்யான புகார்களை சுமத்தினர். ஆனால், சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். அது, ஒருநாளும் பொய்க்காது என்று நம்பினேன். அதற்கு பலன் கிடைத்து விட்டது. உண்மை வென்று விட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நான் அனுமன் மீது உண்மையான பக்தியை கொண்டவன். அவர் மீது பாரத்தை போட்டு விட்டு வழக்கு விசாரணையில் பங்கேற்றேன். தற்போது விடுதலை அடைந்து விட்டேன்’ என்றார்.இதற்கிடையில் பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மல்யுத்த வீரர் பஞ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘போக்சோ குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பிரிஜ் பூஷன் சிங் ஒரு ரோடு ஷோ நடத்தி அதை தனது வெற்றியை காட்டுகிறார்.

அதே நேரத்தில் 6 பெண் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. பிரிஜ் பூஷனின் அழுத்தத்தின் காரணமாக, மைனர் மல்யுத்த வீராங்கனை பின்வாங்கியுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே ஒரு முறை நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். மற்ற 6 பெண் மல்யுத்த வீரர்கள் மீதும் தன் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு பிரிஜ் பூஷண் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் அவர் தனது அதிகாரத்தை வெளிப்படுத்த மற்றொரு ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருக்கலாம்.

சில சமயங்களில், சட்டத்தின் ஆட்சி குண்டர்களால் தாழ்ந்து வருவதாக நான் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ, வினேஷ் போகத், ‘போலீஸ் உங்களுடையது, தலைவர் உங்களுடையர், நீங்கள் பொய்யை உண்மையாக வெளியிடுகிறீர்கள். செய்தித்தாள் உங்களுடையது. உங்களுக்கு எதிராக எங்கே புகார் செய்வது? அரசாங்கம் உங்களுடையது. ஆளுநரும் உங்களுடையர்’ என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.