கோழிக்கோடு: கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார். வெளிக்கக்கது சங்கரன் அச்சுதானந்தன் என்ற வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923 அக்.20ல் பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்தார். 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 2006 முதல் 2011ம் ஆண்டு வரை கேரளாவின் முதலமைச்சராக அச்சுதானந்தன் இருந்தார். 1992-1996, 2001-2006, 2011-2016ல் கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ்.அச்சுதானந்தன் இருந்தார். 1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அச்சுதானந்தன் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் அச்சுதானந்தனும் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலச் செயலாளராக 1980-1992ம் ஆண்டு வரை இருந்தார். கேரள நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் 4வது தலைவராகவும் வி.எஸ்.அச்சுதானந்தன் பதவி வகித்தார். கேரள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவராக அச்சுதானந்தன் விளங்கினார். தன்னுடைய எளிமையான பணிகளால் மக்களை கவர்ந்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக 1985-2009ம் ஆண்டு வரை இருந்தார்.
1957ல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தபோது மாநிலக் குழு உறுப்பினராக அச்சுதானந்தன் இருந்தவர். ஜூன் 23ல் உடல்நலக் குறைவால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனை சென்று கேட்டறிந்த நிலையில், தற்போது கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான ஏகேஜி பவனில் அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் தலைமைச் செயலக தர்பார் ஹாலில் நாளை அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மறுநாள் ஆலப்புழாவில் உள்ள சொந்த ஊரில் இறுதிச் சடங்கு முடிந்த பின் தகனம் செய்யப்பட உள்ளது.