Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெளிமாநிலங்களில் ஒதுக்குவதை தவிர்த்து பி.எட் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டு பி.எட் மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை தவிர்த்து தமிழ்நாட்டிலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எட். மாணவர்கள் 2025ம் ஆண்டிற்கான ஜூலை மாத ஸ்வயம் செமஸ்டர் தேர்வுகளை டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் எழுதவிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட பலரும் தாங்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்திருந்த போதிலும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள மைசூர், மங்களூர், பெங்களூர் போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏற்க இயலாத அளவுக்கு பெரும் சுமையை மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

தேர்வுக்கு 10 நாட்களுக்கும் குறைவாக மட்டுமே உள்ள நிலையில், இந்த வகை ஒதுக்கீடுகள் மாணவர்களின் மனஅழுத்தத்தையும், அவர்களின் தயாரிப்பையும் கடுமையாக பாதிக்கின்றன. இந்த அநீதியை உடனடியாக சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்குள் போதிய அளவு தேர்வு மையங்கள் இருந்தும், மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு தள்ளுவது தவிர்க்க முடியாத கஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கல்வி எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளுகிறது.

இது தேர்வுகளின் வெளிப்படைத் தன்மை , சம வாய்ப்பு, மாநில நலன்கள் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. எனவே, தேர்வு தேதி நெருங்கிவரும் சூழலில், பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் உடனடியாக தேர்வு மையங்களை மாற்றி தமிழ்நாட்டிற்குள்ளேயே மறு ஒதுக்கீடு செய்யுமாறும், குறிப்பாக மாணவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யுமாறும் தேசிய தேர்வு முகமைக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த அநீதியை உடனடியாக சரிசெய்யத் தவறினால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆசிரியர் கனவு பறிபோகும் அவல நிலை ஏற்படும். மேலும், தேசியத் தேர்வுகள் இனிமேலாவது எந்த ஒரு மாநிலத்தையும் பாதிக்காத வகையில் நடைபெறவும், வெளிப்படைத்தன்மை, அணுகல்தன்மை, நேர்மை ஆகியவை நமது நாட்டின் கல்விக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளாகத் தொடர்ந்து இருக்கவும் உங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.