சென்னை: நீலாங்கரை பகுதியை சேர்ந்த தர்மன் என்பவர் வாடகை வீடு தேடிய போது வீட்டு புரோக்கர் மூலம் நீலாங்கரை ரெங்கரெட்டி கார்டன் 2வது ெதருவில் வசித்து வரும் நிகமத் நிஷா (52) என்பவர் அறிமுகம் கிடைத்தது. அப்போது நிகமத் நிஷா தனது வீட்டின் கீழ்தளத்தில் வீடு காலியாக உள்ளதாக கூறி ரூ.7 லட்சத்திற்கு லீசுக்கு பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சொன்னப்படி வீடு தரவில்லை. இதனால் தர்மன் கொடுத்த ரூ.7 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார்.
உடனே நிகமத் நிஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தர்மனை லீசுக்கு குடியமர்த்தியுள்ளார். பிறகு லீஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வாடகை ஒப்பந்தம் போட்டு கொடுக்குமாறு தர்மன் கேட்டுள்ளார். அதன் பிறகு நிகமத் நிஷா அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து தர்மன் கடந்த மாதம் 26ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்த கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.அதன்படி மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்திய போது நிகமத் நிஷா வாடகைக்கு வீடுகளை எடுத்து அதை தனது சொந்த வீடு எனக்கூறி இதுபோல் 49 பேருக்கு லீசுக்கு விட்டு ஒவ்வொருவரிடமும் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ரூ.3 கோடி வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து நிகமத் நிஷாவை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.


