Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

1,000 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி; ‘இண்டிகோ’ தலைமை செயல் அதிகாரிக்கு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: விமானச் சேவைகள் முடங்கி பயணிகள் நடுத் தெருவில் நின்ற பிறகு, கண்துடைப்புக்காக ஒன்றிய அரசு தற்போது நோட்டீஸ் அனுப்பி நாடகமாடுகிறது.கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானச் சேவை அடியோடு பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் விமான நிலையங்களில் அல்லல்பட்டனர். புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் வரை ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பயணிகள் தவித்தபோது வேடிக்கை பார்த்த அரசு, நிலைமை கைமீறிய பிறகே தற்போது விழித்துக்கொண்டுள்ளது.

பயணிகள் கொந்தளித்த நிலையில், தங்களின் கண்காணிப்புத் தோல்வியை மறைக்க இண்டிகோ தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) மீது பழியைப் போட்டு டிஜிசிஏ மூலம் ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1ம் தேதி புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தபோதே, அதைச் சரியாகக் கண்காணிக்கத் தவறியது அரசின் குற்றமே ஆகும். ஆனால், தற்போது ‘தலைமை செயல் அதிகாரிதான் முழுப் பொறுப்பு’ என்று கூறி, தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க அதிகாரிகள் முயல்கின்றனர். இது வெறும் கண்துடைப்பு நாடகம் எனப் பயணிகள் விமர்சிக்கின்றனர். இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ‘பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும், நம்பகமான சேவையை வழங்கவும் நீங்கள் தவறிவிட்டீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், விமானப் போக்குவரத்துத் துறையைத் திறம்பட நிர்வகிக்கத் தவறியது ஒன்றிய அரசுதான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. விதிகள் மீறப்பட்டபோது வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது கெடுபிடி காட்டுவது போல் அரசு அறிக்கை விடுவது கேலிக்கூத்தாக உள்ளது.

இந்த நோட்டீஸுக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. பதில் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்களாகப் பயணிகள் தவித்தபோது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு, இப்போது அவசரம் காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே திட்டமிடாத நிர்வாகக் குளறுபடிகளுக்கு ஒன்றிய அரசும் ஒரு காரணம் என்பதை மறைக்கவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கிடையில், சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீடிக்கிறது. ‘வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்’ என்று நிறுவனம் கூறினாலும், ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கால் விமானப் போக்குவரத்துத் துறை மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது. தனியாரைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசின் அலட்சியத்தால் விமான பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.