பொதுஇடத்தில் கொடிக்கம்பம் அகற்றுவதை எதிர்த்து வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவெடுக்கும்; ஐகோர்ட் தனி நீதிபதி தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இதனை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடந்த 15ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் ஜூலை 18ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘கொடிக்கம்பங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.
அதுவரை கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’என்று கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் நடந்து விடாது. 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதுகுறித்து முடிவெடுக்கும்,’ என்று கூறி விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.