Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடை காலம் முடிந்து முதல் ஞாயிறு என்பதால் காசிமேட்டில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர்: சிறிய வகை மீன்களே அதிக விலைக்கு விற்பனை

சென்னை: மீன்பிடி தடை காலம் முடிந்து, நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சிறிய வகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தாலும் விலை அதிகரித்து காணப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 61 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் முடிந்து, கடந்த 14ம் தேதி இரவு மீன் பிடிக்க மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தடைகாலம் முடிந்ததும் அவர்கள் உற்சாகத்துடன் ஆழ்கடலுக்கு சென்றனர். தடைகாலம் முடிந்து முதல் ஞாயிறு என்பதால் காசிமேட்டில் மீன்கள் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனாலும் 40 விசைப்படகுகள் மட்டுமே அதிகாலையில் கரைக்கு திரும்பின. பெரும்பாலும் ஆழ்கடல் செல்லும் விசைபடகுகள் கரைக்கு திரும்ப இரண்டு வாரங்கள் ஆகும்.

நேற்று அதிகாலை கரை திரும்பிய விசைப்படகுகள் குறைந்த தூரமே சென்று வந்ததால் பெரிய வகையிலான மீன்கள் சிக்கவில்லை. இதனால் சிறிய வகை மீன்களே விற்பனைக்கு வந்தது. பெரிய மீன்கள் வாங்க வந்த அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சின்ன வகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் விலை குறையாமல் அதிகரித்தே விற்பனையானது. இருப்பினும் மீன் விற்பனை களைகட்டியது.

அந்த வகையில், வெள்ளை வவ்வால் கிலோ ரூ.1300, வவ்வால் ரூ.900, நாக்கு ரூ.600, சங்கரா சிறியது ரூ.400, சீலா ரூ.300, கிழங்கா ரூ.500, தும்பிலி ரூ.300, பர்லா ரூ.300, சுறா ரூ.700, கடமா ரூ.450, இறால் ரூ.500 என விற்பனை செய்யப்பட்டது. ஆழ்கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான விசைபடகுகள் அடுத்த வாரம் கரைக்கு திரும்பும் என்பதால் அந்த சமயம் மீன்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது. பெரிய வகையிலான மீன்களும் அதிகமாக விற்பனைக்கு வரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘விசைப்படகில் 15 நாட்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றோம். ஆனால் படகில் சிறிய அளவில் கோளாறு இருந்தது. எனவே ஸ்ரீஹரிகோட்டா அருகில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஏராளமான சிறிய வகை மீன்கள் சிக்கிய நிலையில் திரும்பி வந்து விட்டோம். இதுபோன்று 50க்கும் மேற்பட்ட படகுகள் திரும்பி வந்துள்ளன. மீண்டும் இன்று (நேற்று) இரவே படகுகளை சரி செய்து மீன்பிடிக்கச் செல்வோம் என்றனர்.