நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கூகுள், யுனிட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உலகளாவிய நிறுவனமான கூகுள், யுனிட்டி நிறுவனத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘நான் முதல்வன்’ திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் மிஜிமி மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்த திட்டம் நகர்ப்புற மாணவர்களின் திறன்களுக்கு இணையாக ஊரகப்பகுதியை சேர்ந்த மாணவர்களின் திறன்களை எவ்வித செலவுமின்றி உயர்த்துவதற்கு, மைக்ரோ சாப்ட், ஐபிஎம், கூகுள், சிஸ்கோ, எச்சிஎல், இன்போசிஸ், ஏடபிள்யூஎஸ், சீமென்ஸ், பானு குளோபல், டசால்ட், எல் அண்ட் டி போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்த பயிற்சிகள் பிக் டேட்டா, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தொழில்துறை 4.0, ரோபாட்டிக்ஸ், கட்டிடத் தகவல் மாடலிங்போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதிலும் இலவசமாகவும் பெற ஏற்றவாறு பிரத்யேகமாக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 3,28,393 இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நான் முதல்வன் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் முதல் படியாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் பயிற்சி வழங்கப்பட்டது.
இவர்களில் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி பெற்ற 25 மாணவர்களில், 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களான பேங்க் ஆப் நியூயார்க், சிட்டிகார்ப், ஜோஹோ, எச்.சி.எல் டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானமாக சுமார் ரூ.10 லட்சம் முதல் 31 லட்சம் வரை பெறுகின்றனர். இதர 12 மாணவர்கள் உயர்கல்வியை தொடர்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் இன்டன்ஷிப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுள், 6 மாணவிகள் நெக்ஸ்ட் ஜென் கார்ப் என்ற நிறுவனத்தில் கணினி துறையில் தொழில் பயிற்சி பெற்று, 5 மாணவிகள் அதே நிறுவனத்தில் முழு நேர பணி நியமனம் பெற்று ஆண்டு வருமானமாக சுமார் ரூ.21 லட்சம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டில் 6 மாணவர்கள் தென்கொரியா நாட்டில் உள்ள புஷன் யுனிவர்சிட்டியிலும் காஜோன் யுனிவர்சிட்டியிலும் இன்டன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இதில், காஜோன் யுனிவர்சிட்டியில் இன்டன்ஷிப் முடித்த 3 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில காஜோன் யுனிவர்சிட்டி வாய்ப்பளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலப்பர் பயிற்சி திட்டம் என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலப்பர் பயிற்சி திட்டம்என்பது கூகுள் பிளே, யுனிட்டி மற்றும் முன்னணி கேம் துறையினர் இணைந்து வழங்கும் ஒரு சிறப்பு திறன் பயிற்சி ஆகும். இது கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகியவற்றில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப திறன்களை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கணினி அறிவியல் துறையில் உள்ள இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.
இத்திட்டத்தில் இலவச யுனிட்டி லைசென்ஸ், இலவச பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடல் வாய்ப்பு, மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும். முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாணவர்களுக்கு இந்த திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது, ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.32 ஆயிரம் மதிப்புடைய யுனிட்டி லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதன் மொத்த மதிப்பு ரூ.80,32,500 ஆகும். உலகளாவிய கேமிங் இண்டஸ்ட்ரியின் தற்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் ஆகும். 2029க்குள் இந்தியாவின் கேமிங் இண்டஸ்ட்ரியின் சந்தை மதிப்பு 9 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த கணினி அறிவியல் துறையில் உள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, கூகுள் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
* உலகளாவிய கேமிங் இண்டஸ்ட்ரியின் தற்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் ஆகும். 2029க்குள் இந்தியாவின் கேமிங் இண்டஸ்ட்ரியின் சந்தை மதிப்பு 9 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இத்திட்டத்தில் இலவச யுனிட்டி லைசென்ஸ், இலவச பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடல் வாய்ப்பு, மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும்.


