*முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்
புதுச்சேரி : புதுச்சேரி தீயணைப்புத்துறையில் கடந்த மே மாதம் 29ம் தேதியன்று நேரடித்தேர்வு ஆட்சேர்ப்பு மூலமாக 4 (ஆண் 2, பெண்-2) நிலைய அதிகாரிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்துறையில் மேலும் காலியாக உள்ள 58 தீயணைப்பு வீரர்கள் (ஆண்-39, பெண் -19) மற்றும் 12 தீயணைப்பு வாகன ஓட்டுநர்களுக்கான பதவிகளில், நேரடித்தேர்வு ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்தது.
தேர்ச்சி பெற்றுள்ள 49 தீயணைப்பு வீரர்கள் (ஆண் - 32, பெண் - 17) மற்றும் 10 தீயணைப்பு வாகன ஓட்டுநர் பதவிகளுக்கான பணி ஆணையை சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
மேலும் இத்துறையில் பதவி உயர்வின்றி 10, 15 மற்றும் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தீயணைப்பு வீரர்களுக்கு, முறையே முன்னணி தீயணைப்பு வீரர் சிறப்பு நிலை (22 பேர்), நிலைய அதிகாரி (சிறப்பு நிலை) - 74 பேர் மற்றும் நிலைய அதிகாரி (சிறப்பு நிலை-I) 39 நபர்களுக்கு சிறப்பு நிலை சீருடை அந்தஸ்து வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமார், அரசு செயலர் (தீயணைப்புத்துறை) முத்தம்மா, சார்பு செயலர் (உள்துறை), கோட்டத் தீயணைப்பு அதிகாரி மற்றும் உதவி கோட்டத் தீயணைப்பு அதிகாரிகள் உடனிருந்தனர். புதுச்சேரி தீயணைப்புத்துறையில் முதல்முறையாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு 17 பெண் தீயணைப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


