Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவலிங்கம், முருகன் நந்தி உள்பட 5 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு: தாசில்தார் விசாரணை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, 5 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். வண்டலூர் அருகே நெடுங்குன்றத்தில் உள்ள கோயில் நிலத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சித்தர் கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அவர் மறைந்த பிறகு கோயில், வீடு, சமாதி மற்றும் கிணறு ஆகியவை இடிக்கப்பட்டன. சில காலங்களுக்கு பிறகு, அனைத்தும் மண்ணில் புதைந்து விட்டன. அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து பட்டா வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிலத்தில் நேற்று ஒரு சிலர் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது ஏதோ தென்பட்டது. மேலும் ஆழமாக தோண்டியபோது சிவலிங்கம், முருகன், பெரிய நந்தி, சிறிய நந்தி, பலிபீடம் என 5 சுவாமி சிலைகள் புதைந்திருந்தது தெரியவந்தது.

அந்த சிலைகள் அனைத்தையும் வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து விட்டு சென்றனர். 5 சுவாமி சிலைகளையும் அப்பகுதி மக்கள் மீட்டு, அருகிலுள்ள சூராத்தம்மன் கோயில் குளத்தில் வைத்து பூஜைகள் செய்தனர். இதற்கிடையில் தகவலறிந்து வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கட்டுமான பணிகளோ அல்லது எந்தவொரு வளர்ச்சி திட்ட பணிகளோ மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கும்படி தாசில்தார் உத்தரவிட்டார். மேலும், சுவாமி சிலைகள் புதைந்திருந்த இடம் பட்டா நிலமா அல்லது கோயில் இடமா என தாசில்தார் விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், பூமியில் புதைந்திருந்த சுவாமி சிலைகள் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பிறகு, அச்சிலைகளை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.