Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

`துப்பாக்கியை’விட்டு விலகி சென்றவர்... மீண்டும் வந்து வச்ச குறி தப்பவில்லை!; கடைசி வரை போராடினால் வெற்றி நிச்சயம்: சாதனை நாயகி மனு பாக்கர் பேட்டி

பாரிஸ்: 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அரியானாவை சேர்ந்த 22 வயது மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று சாதனைபடைத்துள்ளார். தனது 16 வது வயதில் இருந்தே சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஜொலித்து வந்த மனு பாக்கர், இதுவரை உலக கோப்பையில் ஒன்பது தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்கம், ஒரு வெண்கலம், காமன்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம் என மொத்தம் 15 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்களை வென்றிருக்கிறார். தனது 2வது ஒலிம்பிக் தொடரிலேயே வெண்கலம் வென்று சாதனை படைத்த மனு பாக்கர், 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார்.

ஆரம்பத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் ஆர்வம் செலுத்திவந்த மனு பாக்கர், பின்னர்தான் துப்பாக்கி சுடுதல் போட்டி பக்கம் திரும்பி உள்ளார். முதலில் தேசிய அளவில், தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்று தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அதாவது, தனது துப்பாக்கி சரியாக இயங்கவில்லை என மனு பாக்கர் புகார் அளித்தார். ஆனால் வேறு துப்பாக்கி மாற்ற நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு மனு பாக்கருக்கு பறிபோனது. இதனிடையே தன் சிறு வயது பயிற்சியாளரான ஜஸ்பல் ராணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடம் இருந்து விலகிச் சென்று மனு பாக்கர் தொடர்ந்து சரிவை சந்தித்தார். இதனால் துவண்டு போயிருந்த மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டே வேண்டாம் என உதறி விட்டு சென்றுவிட்டார்.

ஆனால் பயிற்சியாளர் ராணா மனு பாக்கருடன் சமரசமாகி அவர் மீண்டும் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த உறுதுணையாக இருந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டாக கடும் பயிற்சியில் ஈடுபட்ட மனு பாக்கர் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தி இருக்கிறார். வெற்றிக்கு பிறகு பேசிய மனு பாக்கர், ”நீண்டகாலத்துக்குப் பிறகு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இது சாத்தியம் ஆவதற்கு நான் ஒரு கருவியாக மட்டுமே இருந்துள்ளேன். இன்னும் அதிகமான பதக்கங்களை இந்தியா வெல்லும். தற்போது வரை நான் கனவில் இருப்பது போலவே உணர்கிறேன். எனது கடும் முயற்சியும், கடைசி ஷாட் வரை முழு ஆற்றலுடன் போராடியதாலும் தான் வெண்கலம் கிடைத்துள்ளது. பொதுவாக முழு நம்பிக்கையுடன் இறுதிவரை போராடினால் நாம் வச்ச குறி தப்பாது. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன்” என்றார்.