ஆனந்திற்கு பின் 2வது வீரராக அதிரடி ஃபிடே ரேட்டிங்கில் 2801 புள்ளி பெற்று இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி சாதனை
புதுடெல்லி: செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இந்தியாவின் 2வது வீரராக, அர்ஜுன் எரிகேசி (21), செஸ் போட்டிக்கான இஎல்ஓ ரேட்டிங்கில் 2800 புள்ளிகளை கடந்து அரிய சாதனை படைத்துள்ளார். செஸ் வீரர்களுக்கான ஃபிடே ரேட்டிங் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதன்படி, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி, 2801 இஎல்ஓ ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார். உலகளவில் 2800 புள்ளிகளை கடக்கும் 16வது வீரர் எரிகேசி. இந்தியாவை பொறுத்தவரை, 5 முறை செஸ் உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு பின், இரண்டாவது வீரராக எரிகேசி இந்த மைல் கல்லை கடந்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த ஐரோப்பா செஸ் கிளப் கோப்பைக்கான போட்டியில் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெகினை 5வது ரவுண்டில் வீழ்த்தியதை அடுத்து, எரிகேசியின் புள்ளிகள் 2801 ஆக உயர்ந்தது. எரிகேசி, சமீபத்தில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று தனிநபர் தங்கம், குழுவாக பங்கேற்ற போட்டியில் தங்கம் வென்றவர். உலகளவில் ஃபிடே ரேட்டிங்படி, 4ம் இடத்தில் எரிகேசி உள்ளார். முதலிடத்தில் 2831 புள்ளிகளுடன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 2ம் இடத்தில் 2805 புள்ளிகளுடன் அமெரிக்காவின் பேபியானோ கரவ்னா, 3ம் இடத்தில் 2802 புள்ளிகளுடன் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளனர்.