Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்

நாமக்கல்: பெண்களுடனான தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து கொடுத்து, தாய் மற்றும் தாத்தாவை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் கொசவம்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45), லாரி டிரைவர். இவரது மனைவி நதியா(39). இவர்களுக்கு பகவதி (21), கவுசிக் ஆதி (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பகவதி தனியார் கல்லூரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கவுசிக் ஆதி நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் பிஏ படித்து வருகிறார். பகவதி, தேவராயபுரத்தில் உள்ள தனது தாத்தா சண்முகநாதன் (67) உடன் வசித்து வந்தார்.

அடிக்கடி பெற்றோரை பார்த்து விட்டுச் செல்வார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு, பகவதி நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டார். பின்னர், தனது குடும்பத்தினருக்கு 6 பார்சல் சிக்கன் ரைஸ் வாங்கிச்சென்றார். இதில் 2 சிக்கன் ரைஸ் பாக்கெட்டுகளை, தனது தம்பி கவுசிக் ஆதி மூலம், தனது தாய்க்கு கொடுத்து அனுப்பினார். மீதமுள்ள 4 பாக்கெட்டுகளை தேவராயபுரம் சென்று தாத்தா சண்முகநாதன் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியா, சண்முகநாதன் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் கடந்த 30ம்தேதி சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட மற்ற யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னையால் யாரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பகவதி வாங்கிச் சென்ற சிக்கன் ரைஸ் மாதிரியை சேகரித்து, சேலம் பகுப்பாய்வு கூடத்துக்கு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலத்தில் உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் பகவதியை அழைத்து வந்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது தாய் நதியா, தாத்தா சண்முகநாதன் இருவரையும் கொலை செய்யும் நோக்கில், சிக்கன் ரைஸில் பருத்தி செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையின் போது, விஷம் வைத்து கொன்றது ஏன் என்பது குறித்து, கைதான பகவதி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பகவதி தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. செல்போனில் அடிக்கடி ஆபாச படம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அவரது தாய் நதியா, மகனை கண்டித்துள்ளார். தாத்தாவும் அவரது பங்குக்கு கண்டித்துள்ளார். மேலும், ஆன்லைன் கிளாஸ் நடக்கும் போதும், பகவதி வகுப்பை கவனிக்காமல், செல்போனில் பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதை அவரது தாய் நதியா, தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பகவதி, தனது தாய் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் தாத்தாவை கொலை செய்ய, கடந்த 6 மாதமாக திட்டம் போட்டு வந்துள்ளார்.

கடந்த 30ம் தேதி இரவு, நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டலில் 6 பார்சல் சிக்கன் ரைஸ் பகவதி வாங்கியுள்ளார். பின்னர், நாமக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு செல்லும் வழியில், மறைவாக நின்று பார்சலை பிரித்து, 6 பார்சல்களிலும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துள்ளார். பின்னர், 2 பாக்கெட்டுகளை தம்பியிடம் கொடுத்து, வீட்டில் சென்று அம்மாவுக்கு கொடுத்து சாப்பிடும்படி கூறி விட்டு, மீதமுள்ள 4 பார்சல்களுடன் தேவராயபுரம் சென்றுள்ளார். நதியா சிக்கன் ரைஸ் பார்சலை பிரித்து சிறிது சாப்பிட்ட போது, அதில் வாடை வீசியதால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் பாதியை சாப்பிடாமல் வைத்து விட்டார். உடனடியாக தேவராயபுரத்துக்கு போன் செய்து, மற்றவர்களையும் அதை சாப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், அதற்குள் சண்முகநாதன் சாப்பிட்டு விட்டார். இதனால், நதியா மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சாப்பிடாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் தான், மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சண்முகநாதன் உயிரிழந்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நதியாவும், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.