விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: இணையதளம் வழியாக விண்ணப்பித்து இலவசமாக பெறலாம்
சென்னை: விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன் மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 12ம் தேதி அறிவித்தார்.
அவரது உத்தரவுக்கு ஏற்ப, இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண்.14, இயற்கை வளங்கள் துறை சார்பில் அன்றைய தினம் திருத்தம் செய்யப்பட்டு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.
நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் கடந்த மாதம் 25ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தினை, தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், மேயர் ஆர். சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், திருவாரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவன பிரியா செந்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.