*உதவி இயக்குநர் தகவல்
ஊட்டி : விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்கள் தோட்டங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உர பரிந்துரைகளின் படி உரமிட்டால் அதிக மகசூல் பெற முடியும் என மண் ஆய்வு கூட உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச மண் வள தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மண் வளங்களின் நிலையான மேலாண்மையை ஊக்குவிக்கவும், உலக மண்வள தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி அருகே இத்தலார், எமரால்டு, சுரேந்தர் நகர் பகுதிகளில் உலக மண்வள தின நிகழ்ச்சி நடந்தது.
தோட்டக்கலை துணை இயக்குநர் நவநீதா தலைமை வகித்து, விவசாயிகள் மத்தியில் மண்வள பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விஜயகுமார், உழவியல் துறை துணை பேராசிரியர் தேன்மொழி, மண்ணியல் துறை உதவி பேராசிரியர் ஜெய்ஸ்ரீதர் ஆகியோர் மண்ணின் தன்மை குறித்தும் அவற்றை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையை சேர்ந்த கீர்த்தனா, மண்வளம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேசினார். ஊட்டி மண் ஆய்வு கூட தோட்டக்கலை உதவி இயக்குநர் அனிதா பேசுகையில், ‘‘மண்ணில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவை அறிந்திடவும், மண் மற்றும் பயிருக்கு ஏற்ற உர வகைகள் மற்றும் அளவினை அறிந்திடவும், மண்ணில் உள்ள அமிலம், உவர் மற்றும் களர் தன்மைகளை அறியவும், மண்ணின் தன்மைக்கேற்ற பயிரினை தேர்வு செய்யவும், மண் வளத்தை பாதுகாத்து சமர்சீர் உரமிட்டு உர செலவினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம். விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்கள் தோட்டங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய வேண்டும்.
பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மண்ணுடன் பெயர் மற்றும் முகவரி, சர்வே எண், நிலத்தின் பெயர், முந்தைய பயிர், பயிரிடப்போகும் பயிர், ரகம், பாசன வசதி, மண்ணில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களுடன் ஆய்வு கட்டணம் செலுத்தி மண் பரிசோதனை நிலையத்தில் ஒப்படைத்தால், அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்.
மண்வள அட்டையில் உள்ள உர பரிந்துரைகளின் படி உரமிட்டு அதிக மகசூல் பெற வேண்டும்’’ என்றார். மண் ஆய்வு கூட வேளாண்மை அலுவலர்கள் நிர்மலா தேவி, சாயிநாத் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கிருபாராணி, ஜோதிகுமார் ஆகியோர் மண் மாதிரிகள் எடுத்தல் குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளித்தனர்.


