Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கல்தூண் பந்தல் சாகுபடி திட்டத்தில் மானியம் பெற்று மகசூல் ஈட்டிய விவசாயிகள்

*முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

ஈரோடு : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்தல் இனத்தின் கீழ் 2022-23 முதல் 2024-25 வரை 22.50 ஹெக்டேர் பரப்பளவில் 59 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளி 1 ஹெக்டேர் வரை பயன்பெறலாம். இதில் பந்தல் காய்கறிகளான பீன்ஸ், பட்டாணி, திராட்சை, கிவி பழம் உள்ளிட்ட பலவகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேர் நிரந்தர கல் தூண் பந்தல் அமைக்க ரூ.6 லட்சம் வரை செலவினம் மேற்கொள்ளும் போது அதில் 50 சதவீதத்தை மானியமாக அதாவது ரூ.3 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நிரந்தர கல்தூண் பந்தல் சாகுபடி 2024-25 திட்டத்தின் கீழ் பயன்பெற்ற ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரம், வடுகப்பட்டி கிராமம், வினோபா நகரைச் சேர்ந்த ராமாள் கூறுகையில், ‘‘பீர்க்கங்காய் சாகுபடி செய்திட நிரந்தர கல் தூண் பந்தல் சாகுபடி திட்டத்தில் அரசு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது.

மானியம் பெற்று சாகுபடி செய்ததன் மூலமாக கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 500 கிலோ வரை மகசூல் ஈட்டி உள்ளேன் தற்போது ஒரு கிலோ பீர்க்கங்காய் ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. பந்தல் காய்கறி சாகுபடி முறை ஊக்கமளித்துள்ளது.

என்னைப் போன்ற சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதேபோல, மொடக்குறிச்சி வட்டாரம், வெள்ளபெத்தாம்பாளையம் புதூர், 24 வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், ‘‘ தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி பயிர்களை சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே வருமானம் ஈட்டினேன்.

ஆனால், தற்போது நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து, பீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் சாகுபடி செய்கிறேன். இதன் மூலமாக தற்போது எனக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ. 4 லட்சம் முதல ரூ 4.50 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது. விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.