Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Wednesday, August 13 2025 Epaper LogoEpaper Facebook
Wednesday, August 13, 2025
search-icon-img
Advertisement

உழவர்களுக்கு கிராமங்களிலேயே சேவை வழங்கும் ‘உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வேளா ண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் ‘உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மை துறையில் ரூ.1,94,076 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி, உழவர்களின் வருமானத்தை பெருக்கிட வழிவகை செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவர்களிடம் எடுத்து செல்வது மிகவும் அவசியமாகும் என்பதை உணர்ந்து, உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.

எனவே, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை வழங்க புதிய தொழில் நுட்பங்களை எடுத்துக்கூற ஏதுவாக 2025-26ம் ஆண்டு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ”உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் ‘‘உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தை முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்திற்கான முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அரசு நலத்திட்ட உதவிகள் அவர்களை விரைவாக சென்றடையும். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மொத்தம் மாதந்தோறும் 1540 கிராமங்களில் ”உழவரைத் தேடி-வேளாண்மை-உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடத்தப்படும்.