பிரபல ரவுடி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது: ஏரியாவில் கெத்து காட்டியதால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்
பல்லாவரம்: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை அருகே உள்ள கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவன் அருண்குமார் (24). இவர், மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. மேலும், பல்லாவரம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருந்தார். இந்நிலையில், கடந்த 14ம்தேதி இரவு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பிரபல தனியார் பிரியாணி கடை அருகே உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க அருண்குமார் சென்றபோது, 2 பைக்குகளில் வந்த 6 பேர், அவரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதி கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த சிமியோன் (23), ஜோஸ்வா (20), சிக்கந்தர் (20), ராஜேஷ் (20) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதனிடையே, ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தபோது, மற்ற அனைவரும், கொலை நடந்த அன்று இரவு வண்டலூர் சென்று, அங்கிருந்த காப்புக் காட்டில் பதுங்கியிருந்து விட்டு, மறுநாள் காலையில் ரயில் மூலம் ராமநாதபுரம் தப்பிச்சென்றது தெரியவந்தது.
ராமநாதபுரம் தப்பிச்சென்ற கொலையாளிகள், அங்கிருந்து பல்லாவரத்தில் உள்ள தங்களது மற்ற நண்பர்களிடம் வாட்ஸ்அப் காலில் பேசியபோது, போலீசாருக்கு தங்கள் மீது சந்தேகம் இல்லை என்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, 5 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்து மூலம், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர். இதனை, ரகசியமாக கண்காணித்து காத்திருந்த போலீசார், அவர்களை பிடிக்க முற்பட்டபோது, அதிர்ச்சியடைந்த 5 பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, தடுமாறி கீழே விழுந்ததில் கொலையாளிகள் சிமியோனுக்கு ஒரு கையிலும், ஒரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதேபோன்று ஜோஸ்வா மற்றும் சிக்கந்தருக்கும் தலா ஒரு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, கொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண்குமாரும், சிமியோனும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர், மதுபோதையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தனித்தனி குழுவாக பிரிந்து செயல்படத் தொடங்கினர். அருண்குமார், தான்தான் இனி ஏரியாவில் கெத்து என்று கூறிக்கொண்டு, தனது நண்பர்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்துள்ளார்.
இது எதிர் தரப்பினரான சிமியோன் தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த அன்று இரவும் சிமியோனின் தரப்பைச் சேர்ந்த 2 சிறுவர்களை, அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால், ஏற்கனவே அருண்குமார் மீது கடும் கோபத்தில் இருந்த சிமியோன் தரப்பினர், அருண்குமாரை கொடூரமாக வெட்டிக்கொன்றது தெரியவந்தது. பின்னர், 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்ற 4 பேரையும் புழல் சிறைக்கும் அனுப்பி வைத்தனர்.